சர்கான் குழுவினரின் பயங்கரவாத தாக்குதல்; பிரதான சந்தேக நபர் கைது..!

0

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் மாதம் 21) இடம் பெற்ற தொடர் குண்டு தாக்குதல் சம்பவத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாரியை வழி நடத்திய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இது தொடர்பாக தெரிவிக்கையில் குறித்த சந்தேக நபர் .கொழும்பு, கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல் சம்பவங்களின் போது கொட்டாஞ் சேனையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் இவரது பங்களிப்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறினார்.

தொடர் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறைபாடுகள் நிலவுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நீக்கி உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கமைவாக தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைகள் விரிவான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார்களா என்பது குறித்தும் தற்பொழுது கவனம் செலுத்தப்படுகின்றது.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள சீயோன் தேவாலத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், 83 பேர் படுகாயமடைந்தனர்.
அத்தோடு தொடர் தற்கொலைத் தாக்குதலில் இலங்கையர், மற்றும் வெளிநாட்டவர்கள் அடங்கலாக .250 பேர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள www.Tamilpori.com உடன் தொடர்பில் இருங்கள்.