நாடெங்கும் ஊரடங்குச் சட்டம்; வீடுகளில் சிறுவர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு..!

0

கொடிய வைரசான கொரானோ இலங்கையின் பல பகுதிகளில் தொற்றி, பலரும் அதன் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதனால் அரசாங்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல் படுத்தியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் குடும்பத் தகராறுகளும், சிறுவர் துன்புறுத்தல்களும் அதிகமாகப் பதிவாகியுள்ளன.


இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதான பத்திரன,

ஊரடங்குச் சட்டம் அமுலில் இந்தக் காலப் பகுதியில் சிறுவர் துன்புறுத்தல்கள் 33 வீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், இந்தத் துன்புறுத்தல்கள் குடும்பங்களினால் ஏற்படும் துன்புறுத்தல்களேயன்றி சிறுவர் பாலியல் துன்புறுத்தல்கள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் துன்புறத்தலுக்கு ஆளாகியுள்ள சிறுவர்கள் வீட்டில் உள்ளதே இதற்குக் காரணமாகும்.


சிறுவர் துன்புறுத்தல் என்பது என்னவென்றால் சிறுவர்கள் உடல், உள ரீதியாக பல பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகும்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் சிறுவர் தொடர்பில் நாளொன்றுக்கு 40 அளவிலேயே முறைப்பாடுகள் வந்தன.

அவற்றில் 10 வீதம் சிறுவர் துன்புறுத்தல் தொடர்புடையதாகவே இருந்தன. ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்ததன் பின்னர் கடந்த 07 நாட்களில் மட்டும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 111 ஆகும்.

அவற்றில் 36 முறைப்பாடுகள் சிறுவர் துன்புறத்தல் பற்றியனவாகவே உள்ளன. இந்த ஊரடங்குக் காலப் பகுதியில் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறைவாக இருந்தாலும், அவற்றின் விகிதாசாரம் உயர்ந்துள்ளன.


1929 எனும் சிறுவர் உதவிச் சேவையின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டே பெரும்பாலான முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. வேறு தொலைபேசி இலக்கங்களினூடாகவும், தொலைநகல் மூலமாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சிறுவர்களை நன்கு அறிந்து வைத்துள்ள பெற்றோர், பாதுகாவலர்கள், முதியோர் போன்றோரினாலேயே பெரும்பாலும் சிறுவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

முன்னர் பாடசாலைக்குச் சென்று வந்த மாணவர்கள் தற்போது வீட்டில் முடங்கியிருப்பதனாலேயே இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பெரியோரின் துன்புறுத்தல்கள் அதிகமாக சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளன.


பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அன்பும் ஆதரவும் செலுத்த வேண்டும். சிறுவர்களை அடித்து உதைத்து வதை செய்யும் போது அந்தச் சிறுவர்கள் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

ஊரடங்குச் சட்டம் போன்ற இவ்வாறான நேரத்தில் பிள்ளைகளை அரவணைக்க வேண்டும். அவர்கள் அதனைத்தான் எதிர் பார்க்கின்றார்கள்.

பிள்ளைகளை இவ்வாறு துன்புறுத்துவோர் பற்றி முறைப்பாடு எங்களுக்கு வந்தால், நாங்கள் அவர்கள் பற்றி ஆராய்ந்து அவர்களைக் கைது செய்வோம்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.