நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்; அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

0

இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காலையில் இருந்து நீண்ட வரிசையில் இருந்த போதும் சதொச மற்றும் ஒரு சில மொத்த விற்பனை நிலையங்களில் பாரியளவில் பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இருந்த போதும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதை கருத்திற் கொண்டு பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.

கடந்த 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்கு அமுலுக்கு வந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6மணிக்குத் தளர்த்தப்பட்டது.

அதனால் மக்கள் காலையிலே தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்காக சிரமத்துக்கு மத்தியில் சதொச மற்றும் மொத்த சில்லறைக் கடைகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


மக்கள் மருந்துகள், வங்கி, இறைச்சி, மீன் என்பன கொள்வனவு செய்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் இருந்து பெற்றுக் கொண்டதை காண முடிந்தது.

மேலும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் இருந்து சென்ற போதும் ஒரு சில கடைகளில் அரிசி, கோதுமை மா, டின் மீன், பருப்பு, முட்டை போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.


அதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வேறு பிரதேசங்களுக்கு சென்று கூடிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்வதை காண முடிந்தது.

மேலும் அரசாங்கம் பருப்பு, டின்மீன் மற்றும் முட்டை போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு குறித்த பொருட்களை கடைகளில் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் இருந்தது.


எனவே இவ்வாறான நிலையினை கருத்தில் கொண்டு அரசாங்கம், நுகர்வோர் அதிகாரசபை, மாவட்டச் செயலகம், பொலிசார், இராணுவத்தினர் இணைந்து எதிர்வரும் வியாழன், வெள்ளிக் கிழமைகளில் நடைமுறைப் படுத்தவுள்ள ஊரடங்கு தளர்வு நேரத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க மாற்று ஒழுங்கினை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கி்ன்றனர்.

தவறின் சன நெரிசல் காரணமாக வடக்கு உட்பட நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க முடியாத நிலை ஏற்படும்.