போலித் தகவல்களை பரப்புவோரை கட்டுப்படுத்த புலனாய்வுப் பிரிவினர் களத்தில்..!

0

சமூக வலைத் தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை பரப்புவர்களை கண்டறிந்து அவர்களை கட்டுப் படுத்தவதற்காக புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.



அபாயமிக்க கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 22மில்லியன் இலங்கையர்களையும் பாதுகாப்பதற்காக முப் படையினரும், பொலிஸாரும், அனைத்துப் பிரிவு புலனாய்வுத் துறையினரும் நேரம் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.


பொது மக்கள் எவரும் தனிமைப்படுத்தல் மையங்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்றும் கொரோனா தொற்றுக் குறித்த அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனைகளுடன் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருப்பதானது இந்த நோயைக் கட்டப்படுத்துவதற்கு நாம் செய்யும் பாரிய சமுகக் கடமையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.


இதேவேளை அண்மைய நாட்களில் வீட்டில் இருந்தவாறே சுயதனிமைப் படுத்தலை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன கூட்டிணைந்து மேற்கொண்டு வருவதாகவும் சுய தனிமைப்படுத்தல் அவசியமானவர்கள் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனையுடன் அதனை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.


அத்துடன் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தமது வீடுகளை சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரின் ஆலோசனையுடன் அடையாளப்படுத்தப் படுத்துவதிலிருந்து விலகியிருக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.