கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு..!

0

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நால்வர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

ஏற்கனவே சீன பெண் ஒருவர் குணப்படுத்தப்பட்ட நிலையில், இந்த 82 பேரில் தற்போது இலங்கையில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் 81 பேராவார்.

அவர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்திய சாலையிலும் வெலிகந்தை ஆதார வைத்திய சாலையிலும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளோர் 31 பேராவார்.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நால்வரில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொருவர் யாழ்.அரியாலை பகுதியில் இடம்பெற்ற மத போதனை நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதகருடன் நெருங்கிய உறவை வைத்திருந்தவராவார்.

இவர்களை விட, இத்தாலியில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த ஒருவரும், பிரித்தானிய சுற்றுலா குழுவொன்றுக்கு வழி காட்டியாக செயற்பட்ட ஒருவரும் இன்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டோரில் உள்ளடங்குகின்றனர்.

இதனைவிட கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 17 வைத்தியசாலைகளில் 5 வெளிநாட்டவர்கள் உட்பட 222 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன் தற்போது 45 தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் தடுப்பு நிலையங்களில் 3361 பேர் கண்காணிக்குட்படுத்தப் பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணிய 11,482 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இதனிடையே இந் நட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களுக்கு மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையின் போது வழங்கப்படும் ஹைட்ரிக்ஸி க்லொரோக்வீன் எனும் மருந்தினை பயன்படுத்த விஷேட வைத்திய நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த மருந்துக்கு கொரோனா தொற்றாளர்களில் அதிக முன்னேற்றம் காணப்படும் நிலையில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அதனை தற்போது தற்காலிகமக பயன்படுத்தும் நிலையிலேயே இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனாவால் பாதிக்கப்படாத ஒருவர் அந்த மருந்தினை உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்த வல்லது என சுகாதார துறை எச்சரித்துள்ளது.

இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது, வடமாகாணத்திலும் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாயன்று காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பு, கமஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு அக்காலப் பகுதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் அது நீடிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் திகதி செவ்வாயன்று காலை 6.00 மணிக்கு அந்த ஊரடங்கு வட மாகாணத்தில் தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீள பிறப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வட மாகாணத்தில் உள்ளவர்கள் அம்மாகாணத்தை விட்டும் மாவட்டங்களை விட்டும் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.