ஜனாதிபதி கோட்டா அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வர வேண்டும்..!

0

ஆட்சி மாற்றங்கள் இடம் பெற்று வருகின்ற போதும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்க்கையிலோ அல்லது அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் மனநிலையிலோ மாற்றங்கள் ஏற்பட்டதாக இல்லை. எனினும் தற்போது முழு நாடுமே கொரோனா வைரஸின் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக சிறைக் கைதிகள் அனைவருமே இந்த வைரஸின் தாக்கம் ஏற்பட்டு விடும் என்ற பதற்றமான மனநிலையுடன் அண்மைய நாட்களை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டும் அவர்களின் உயிர்ப் பாதுகாப்பினை கவனத்திற் கொண்டும் தற்காலிகமாக நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் செயலளருமான சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில்,

ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்க்கையிலோ அல்லது அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் மனநிலையிலோ மாற்றங்கள் ஏற்பட்டதாக இல்லை.

ஆனால் தற்போது முழு நாடுமே கொரோனா வைரஸின் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக சிறைக் கைதிகள் அனைவருமே இந்த வைரஸின் தாக்கம் ஏற்பட்டு விடும் என்ற பதற்றமான மனநிலையுடன் அண்மைய நாட்களை கழித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் பாரிய குற்றங்களை இழைத்த குற்றவாளிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படவர்களின் சிறைக் கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தமக்கான சிறைக் கூடங்களை சரியாக பராமரித்து சுத்தமாக பேணி வந்த நிலையில் அவர்களை வேறுகூடங்களுக்கு மாற்றி நெருக்கடியான சூழலில் வைக்கப்பட்டமையானது கண்டிக்கத்தக்கதாகும்.

நேற்றைய தினம் அநுராதபுர சிறைச் சாலையில் இடம் பெற்ற அசம்பாவிதங்களால் தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர்களின் வாழ்க்கையில் அரைவாசிக்கும் அதிகமான காலத்தினை சிறைகளிலேயே கழித்துள்ள நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது விடுதலையை வலியுறுத்திய போதும் அவை பாராமுகமாகவே இருக்கின்றது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டும் அவர்களின் உயிர்ப் பாதுகாப்பினை கவனத்திற் கொண்டும் தற்காலிகமாக நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறான நடவடிக்கையொன்றே தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்ப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதாகவும் அவர்களின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய உறவுகளுக்கு நிம்மதி அளிப்பதாகவும் இருக்கும்.

கொரோனாவின் தாக்கம் உலகளாவிய ரீதியில் அதிகரித்த போது, ஈரான் அரசு தனக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், போராட்டங்களை நடத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைத்திருந்த ஆயிரக் கணக்கானவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்தது. மேலும், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உயிர் அச்சம் காரணமாக சிறைக் கைதிகள் போராட்டங்களை முன்னெடுத்தமையால் பதற்றமான சூழலும் ஏற்பட்டிருந்தது. ஆகவே இவ்வாறான முன்னுதாரணங்கள் தொடர்பில் கரிசனை கொண்டு உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு கோருகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.