அனுராதபுரம் சிறைச் சாலையில் நடந்தது என்ன? அரசியல் கைதிகளை கொல்லச் சதியா?

0

நேற்றைய தினம் அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம் பெற்ற வன்முறையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது இரு கைதிகள் உயிரிழந்துள்ளதக வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது ஒரு கைதி உயிரிழந்த நிலையில் மற்றைய கைதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காயமடைந்த 3 பேர் அனுராதபுரம் போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார். சிறைச் சாலையில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா அச்சத்தை அடுத்து இடம் பெற்ற போராட்டம், குழப்பமாக மாறியுள்ளதாகவும் இதன் போது சிறையை உடைத்து தப்பியோட முற்பட்டவர்கள் மீது சிறைக் காவலர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

இதேவேளை குறித்த சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஓடவிட்டு சுடுவதற்கான முயற்சியும் இடம் பெற்றதாக ஒருசில ஊடகங்களில் செய்த வெளியாகியிருந்தன. அத்துடன் உடன் செயற்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

மேலும் தமிழ் அரசியல் கைதிகள் மீதான படுகொலை மற்றும் படுகொலை முயற்சிகள் தமிழர் மீது குட்டிமணி, தங்கத்துரை தொடக்கம் நிமலரூபன் என ஒரு பெரும் பட்டியலே தமிழர் தரப்பிடம் உண்டு.

எனவே கொரோனா அச்சத்தால் நாடே குழப்பத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையிலோ, பொலிஸ் பிணையிலொ உடன் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதற்கான அழுத்தத்தை அரசின் பங்காளிக் கட்சிகளும், மொட்டின் வேட்பாளர்களும் உடன் வழங்க முன்வர வேண்டும். அரசுக்கு முண்டு கொடுப்பவர்களுக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.