தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – டக்ளஸ்

0

அனுராதபுரம் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கலங்கத் தேவையில்லை என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


அனுராதாபுரம் சிறைச்சாலையில் இன்று(21.03.2020) குழப்ப நிலை ஏற்பட்டதை தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளும் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்ட அமைச்சர், அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரிசயல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் அரசியல் கைதிகளின் தற்போதைய நிலை தொடர்பிலும் கேட்டறிந்தார்.


இதன்போது அரசியல் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திய சிறைச்சாலை அதிகாரிகள்,அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அங்கு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.


இதன்போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் கைதி ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 3 கைதிகள் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்களினால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.