அரசியல் அறத்தை மறந்த தமிழரசுக் கட்சியும் அதன் தலைமை மாவை சேனாதிராசாவும்..!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலிருந்து விலகி தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளார்.

அத்துடன் இம்முறை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குகின்றார்.


இதேவேளை வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கூட்டத்தின் போதே, இந்த விடயம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கல நாதனுக்கு மாவை சேனாதிராஜாவால் கூறப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் தன்னை முன்னிறுத்திய கட்சிக்கு இறுதி வரை அறிவிக்காமல் விட்டுவிட்டு, இன்னொரு கட்சியின் வேட்பாளராக மாறு(ற்)வது அடிப்படை அரசியல் அறத்துக்கு முரணானது.

அதுவும், ஒரே கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கிடையில் இவ்வாறான துரோக நடவடிக்கைகள், கூட்டணி தர்மங்களுக்கும் எதிரானது. அது, ஜனநாயகத்தின் பிற்போக்குத் தனங்களுக்கு வித்திடும்.


கூட்டணியின் தர்மங்களுக்கு எதிராக செயற்படுவது தமிழரசுக் கட்சிக்கோ, அதன் தற்போதைய தலைவர் மாவைக்கோ புதிதல்ல. அவர்கள், அதனை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், தமிழரசுக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த அனந்தி சசிதரனை தமது கட்சியின் வேட்பாளராக உள்ளடக்குவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். விரும்பியது.

ஆனால், தங்களது கட்சிக்கு விரோதமாகச் செயற்பட்ட ஒருவரை, பங்காளிக் கட்சியொன்று வேட்பாளராக முன்னிறுத்துவது கூட்டணி தர்மங்களுக்கு எதிரானது என்று அன்றைக்கு மாவை எதிர்த்தார். அதனால், கடந்த பொதுத் தேர்தலில் அனந்தி போட்டியிட முடியாமற் போனது. அதற்குப் பதிலாக நடராஜா அனந்தராஜ் வேட்பாளராக்கப்பட்டார்.


ஆனால், பொதுத் தேர்தல் முடிந்து சில காலத்துக்குள்ளேயே வன்னி தேர்தல் மாவட்டத்தில் வெற்றியீட்டிய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் வைத்தியர் சிவமோகனை, தமிழரசுக் கட்சி தன்னோடு இணைந்துக் கொண்டது. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராகவும் அவர் மாறிவிட்டார்.

இதேவேளை மாவையிடம் கூட்டணி தர்மம் பற்றிய எண்ணம் இன்றுவரை இல்லை. கிட்டத்தட்ட அவர், முதுகில் குத்தும் கேவலங்கெட்ட அரசியல் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளார்.

சிவமோகனுக்கு முன்னர் சிவஞானம் சிறீதரன் 2010 பொதுத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப். வழங்கிய ஆசனத்தில் வெற்றி பெற்று, பின்னர் தமிழரசுக் கட்சிக்கு தாவினார். அதேபோல் ரவிகரன், சிவமோகன் போன்ற வரலாற்றுப் பக்கங்களின் தொடர்ச்சியாக கோடீஸ்வரனும் இடம் பெற்றுள்ளார்.

கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் தமிழரசுக் கட்சி சொல்வதும் செய்வதும்தான் இறுதியானது என்கிற சர்வதிகார நிலை உருவாகி விட்டது. பங்காளிக் கட்சிகளை சரிசமமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணமோ, அடிப்படை அரசியல் அறமோ அங்கு பேணப்படுவதில்லை.

பங்காளிக் கட்சிகளும், அதன் தலைமைகளும் தமது பாராளுமன்ற ஆசனங்களைப் பாதுகாத்தால் போதுமென்கிற நிலையில், எல்லாவற்றுக்கும் இணங்கிச் செல்லும் நிலையில் உள்ளனர். கூட்டணி தர்மங்களுக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டிக்கவோ, அதற்கு எதிராக போராடவோ அவர்கள் தயாராகவும் இல்லை.


செல்வம் அடைக்கலநாதனும், புளொட்டின் தர்மலிங்கம் சித்தார்த்தனும் வெற்றி பெறும் தரப்போடு இருக்கவே விரும்புகிறார்களே தவிர ஆளுமையுள்ள அரசியலொன்றை செய்வதற்கான தற்துணிவு அவர்களிடம் இல்லை. இதனால், தமிழரசுக் கட்சியினர் இவ்வாறான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை வைத்துக் கொண்டிருக்கும் வரை பேணப்பட்ட குறைந்த பட்ச அறத்தினைக் கூட மாவை பின்பற்ற விரும்பவில்லை. அவர், தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தும் நபர்களினால் சூழப்பட்டிருக்கிறார்.

தன்னுடைய வாரிசு சார்ந்து சிந்தித்துச் செயற்படத் தொடங்கி விட்டார். அதனால், கட்சிக்குள் தன்னுடைய பலத்தினை இன்னும் இன்னும் அதிகப்படுத்துவதற்காக, கீழ்த்தரமான அரசியலைச் செய்வதற்கும் தயங்காதவராக மாறிவிட்டார்.

தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் வேட்பாளர் நியமனப் போட்டி தொடக்கம் பங்காளிக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் என்று நம்பப்படுபவர்களை அபகரிப்பது வரையில் இந்த அடிப்படையிலேயே நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த இருவருக்கு எதிராக தமிழரசுக் கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு காணப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வரை எழுந்திருக்கின்றது.


ஆளுமையற்றவர்களின், மோசடிக்காரர்களின் கூடாரமாக தமிழரசுக் கட்சி மாறுவதற்கான பாதை, அதன் தலைமைகளாலேயே போடப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதான கட்சியொன்று, அதன் அடிப்படைகளுக்கு அப்பாலான கட்டங்களில் பயணிப்பது என்பது, அதுவும், அதன் தலைமையாலேயே அதனை நோக்கித் தள்ளப்படுவது மிகவும் அபத்தமானது.

அரசியல் தலைமைத்துவம் என்பது ஆளுமைகளின் வழியும் தார்மீகங்களின் வழியும் எழுந்துவர வேண்டும். மாறாக, தமிழரசுக் கட்சியின் துதிபாடும் அரசியல் அறங்களுக்கு அப்பாலான அனைத்துக் கட்டங்களையும் செய்ய எத்தணிக்கும். அது, முதுகில் குத்துவதில் தொடங்கி, மோசடிக்காரர்களைக் காப்பாற்றுவது வரை தொடர்கிறது.

அவ்வாறானதொரு கட்டத்தை நோக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழரசுக் கட்சியின் தலைமை அழைத்துச் சென்று விட்டுள்ளது.

அதுபோலவே நடைமுறைச் சாத்தியமற்ற, இந்திய, உள்ளிட்ட மேற்குலகின் ஆதரவு இன்றிய தீர்வும் சாத்தியமற்றது. அதனைக் கோரும் கயேந்திரகுமாரின் முன்னணியும் பொருத்தமற்றது.

இதனாலேயே விமர்சனங்களுக்கு அப்பால் மாற்றத்தை நோக்கிய பயணத்திற்காய் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அணியைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.