ஊரடங்கு நேரத்தில் பயணித்த பலர் அதிரடிக் கைது; வாகனங்கள் அரசுடமை ஆக்கப்படும்..!

0

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை பயனபடுத்த முடியும்.


கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், இன்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட் கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை தமது கடமைகளுக்காக பயன்படுத்த முடியும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.


நீர்கொழும்பில் 20 பேர் கைது

இதேவேளை புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடைப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை அதனை மீறிச் செயற்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சட்டத்தை மீறுவோரைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் மேற்படி 20 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கு்ம நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை ஊரடங்கு சட்டம் நிலவும் நேரத்தில் நடமாடும் வாகனங்கள் அரசுடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் இருவர் கைது

வவுனியா பொலிஸாரால் இரு இளைஞர்கள் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

குறித்த இருவரும் இன்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் வழி மறித்துள்ளனர்.

எனினும் பொலிஸாரின் சைகையை மீறி இருவரும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி தப்பிசென்றனர்.

இதன்போது அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் குழுவினர் குறித்த இருவரையும் துரத்திச்சென்று பூங்காவீதியில் வைத்து மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்திய பின்னர் சென்றமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸாரின் சைகையை மீறி பயணித்தமை போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் இதன் போது தெரிவித்தனர்.