அபாய கட்டத்தை எட்டும் கொரோனா; அவதானமாக இருக்குமாறு கோரிக்கை..!

0

கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. இதனால் நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய Covid -19 தொற்றை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


இந்த செய்தியாளர் சந்திப்பில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பொலிஸ் உடக பேச்சாளர் அஜித்ரோகன, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி மேலும் கருத்து தெரிவிக்கையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மீண்டும் கேட்டுக் கொண்டார்.


நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேசந்திர சில்வா கருத்து தெரிவிக்கையில்,


இந்தியாவில் யாத்திரையை மேற்கொண்டு நாடு திரும்பும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் 1,500 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் பெறப்பட்டுள்ளன. சுயமாக தானிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு இவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.