இலங்கையில் கொரோனா; நோயாளர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு..!

0

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளியான சுற்றுலா வழிகாட்டியின் மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டடிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜகாசிங்க தெரிவித்துள்ளார்.


இதேபோன்று ஜேர்மனியில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்த பின்னர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இந்த நாட்டில் அடையாளம் காணப்பட்ட நபரின் உறவினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை பிரிட்டனில் இருந்து வருகை தந்த நபர், கட்டாரில் இருந்து வருகை தந்த உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரும், களனி மற்றும் மாரவெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.


தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களை கொழும்பு IDH அங்கொடை வைத்திய சாலைக்கு அழைத்து செல்லும் சிரமத்தை தவிப்பதற்காக பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலையை அதற்காக பயன்படுத்துவதற்கு தற்பொழுது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக பணிப்பாளர் நாயகம் கூறினார்.

இந்த வைத்திய சாலைக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவம் இதனை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இங்கு ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றது.இதற்கு தேவையான வைத்தியர்களையும், ஊழியர்களையும் வெளி மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பை விடுத்திருந்தது.


119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு மேலதிகமாக கீழ்வரும் இலக்கங்ககளின் ஊடாகவும் தகவல்களை வழங்க முடியும். தொலைபேசி இலக்கங்கள்: 0112444480 / 0112444481 / 0115978720 / 0115978730 / 0115978734.