வவுனியா வைரவ புளியங்குளத்தில் சீனப் பிரஜைகள்; விரைந்து செயற்பட்ட பொலிசார்..!

0

வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியில் சீனா நாட்டு பிரஜைகள் மூவர் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக தகவல் பொது மக்களால் நேற்று இரவு சமூக ஆர்வலர்கள் சிலருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து அவர்களை அங்கிருந்து அகற்றி தனிமைப்படுத்துமாறும், சிகிச்சையளிக்குமாறும் வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

மன்னார் வவுனியா பிரதான வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மூன்று பொறியியல்துறை சார்ந்த சீனா நாட்டுப் பிரஜைகள் மற்றும் இளம் சிங்கள பொறியியலாளரான பெண்ணும் தங்கியிருந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டினூடாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இலங்கை வந்துள்ளார். ஏனைய இருவரும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே சீனாவிலிருந்து இலங்கைக்கு விமான நிலையத்தினூடாக வருகை தந்துள்ளனர். அவர்கள் கடந்த சில வாரங்களாக வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிற்குள் தனிமையாக இருந்து வந்துள்ளனர்.


அத்துடன் கடந்த 5ம் திகதி கொரோனா தொற்று ஏற்பட்ட சீனாவின் குறித்த பிராந்தியத்திலிருந்து வருகை தந்த சீனர் ஒருவர் சாவகச்சேரியில் இருந்து தலைமறைவாகி இங்கு வந்ததாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அப் பகுதியிலிருந்து அவர்களை அகற்றுமாறும் பொலிசாருக்கு நேற்று இரவு சமூக ஆர்வலர்கள் சிலரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


நேற்று இரவு 10மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் சீனா நாட்டு பிரஜைகள் தங்கியுள்ள வீட்டின் பாதுகாப்பு ஊழியரிடம் விசாரணைகள் மேற்கொண்டதுடன் அவர்களை அங்கு தங்க வைக்க நடவடிக்கை எடுத்த உயர் அதிகாரிகளுடனும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடனும் தொடர்பு கொண்டு அவர்கள் இலங்கைக்கு வருகை தந்த ஆவணங்கள், அறிக்கைகள் என்பனவற்றை பரிசோதனை மேற்கொண்டதுடன் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைத்து அவர்களுக்கான ஆரம்ப பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதேவேளை யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இருந்து வெளியேறிய சீனர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.