இந்தியாவில் கொரோனா வைரசால் 64 பேர் பாதிப்பு; ஒருவர் பலி..!

0

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் தாக்கியது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 119 நாடுகளில் பரவி உள்ளது.

இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, டெல்லி, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இதுவரை 64 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு இந்தியாவில் முதல் பலி நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின்பேரில், 76 வயதான முகமது உசேன் சித்திக் கர்நாடகா மாநிலம் குல்பர்கா மருத்துவ அறிவியல் ஆஸ்பத்திரியில் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததா என்பது பற்றி உறுதி செய்யப்படவில்லை.


கொரோனா வைரசுக்கு பலியானதாக சந்தேகிக்கப்படும் முகமதுஉசேன் சித்திக் சவுதி அரேபியாவில் இருந்து சமீபத்தில்தான் நாடு திரும்பி இருந்தார்.கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 29-ந்தேதி கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியும், மகனும் கொச்சி வந்தனர். அவர்கள் கேரளா வந்தது சுகாதாரத் துறையினருக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் இந்த தம்பதியின் வயதான பெற்றோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றனர். சந்தேகத்தின் பேரில் இவர்களின் ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.


அவர்கள் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரி தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் உறவினர்கள் பற்றி சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது. அவர்களையும் சுகாதாரத்துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதில், இத்தாலி தம்பதியின் உறவினர்கள், சகோதரர்கள் என 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதுபோல இத்தாலியில் இருந்து திரும்பிய இன்னொரு தம்பதியின் 3 வயது குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று அக்குழந்தையின் பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் கேரளாவில் கொரோனா பாதிப்பு இருப்போர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் இத்தாலியில் இருந்து திரும்பிய குடும்பத்தினரின் 96 வயது தந்தையும், 89 வயது தாயாரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமானது.


ஏற்கனவே வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த இருவரும் இப்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கேரளா முழுவதும் இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 1,496 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,236 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனையில் உள்ளனர். 259 பேர் ஆஸ்பத்திரிகளில் உள்ள தனி வார்டுகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

நேற்று வரை 970 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் 815 பேரின் முடிவுகள் வந்துள்ளன. அவர்களுக்கு நோய் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டாய விடுப்பு விடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல கேரளாவில் பொது விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளில் அதிகளவில் மக்கள் திரள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படும். 18-ந்தேதி வரை வழிபாடுகள் நடக்கும். இதில் பக்தர்கள் பங்கேற்க வேண்டாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி உள்ளது. கோவிலில் அப்பம், அரவணை விற்பனையும் இருக்காது என்று தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரள மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் 31-ந்தேதி வரை கேரளாவில் தியேட்டர்கள் மூடப்படும். மூணாறு, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

திருமணங்கள் உள்ளிட்ட குடும்ப விழாக்களில் 15-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.