மொட்டின் வவுனியா பிரதேச இணைப்பாளர் கட்சி தாவினார்..!

0

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வவுனியா பூந்தோட்ட வட்டார இணைப்பாளராக செயற்பட்ட சிவலிங்கம் மகாதேவன் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உடன் இணைந்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பொதுஜன பெரமுனவின் வவுனியா பூந்தோட்டம் வட்டார இணைப்பாளராக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரால் வட்டார இணைப்பாளராக சி.மகாதேவன் நியமிக்கப்பட்டிருந்தார்.


இந்த நிலையில் மகாதேவன் அவ் இணைப்பாளர் பதவியில் இருந்து விலகி பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸில் இணைந்து வவுனியா மாவட்ட அமைப்பாளராகவும் அக் கட்சியினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் செயற்பட்டிருந்த இவர் தற்போது பிராபாகணேசனுடைய தேர்தல் பிரச்சார செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.


இது தொடர்பில் தெரிவித்த சி. மகாதேவன், பொதுஜனபெரமுனவின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர்களின் கொள்கையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தான் அக்கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடகிழக்கில் சிங்கள, முஸ்லீம் தேசிய கட்சிகளில் போட்டியிடும் சிங்கள, முஸ்லீம், தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்ற கோசம் மக்கள் மத்தியில் வலுப் பெற்று வருவதனை அவதானிக்க முடிகின்றது.


இதன் காரணமாக தேசிய கட்சிகளில் போட்டியிட்ட அரசின் முகவர்கள் தமது சொந்தக் கட்சியிலேயே தேர்தலை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.