கொரோனா தொடர்பில் வெளியாகிய அபாய எச்சரிக்கை; 100,000 ஐ தாண்டியது..!

0

கொரோனா வைரஸ் விரைவாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) நேற்று எச்சரித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்த பின்னர் இந்த அபாய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சீனாவில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. தென் கொரியாவில், 7,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் காரணமாக ஈரான் மேலும் 21 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. அந்த நாட்டில் மொத்தம் 145 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,823 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, வியட்நாமில் கொரேனா தொற்றிற்கு இலக்கான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


வியட்நாமில் கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருந்த 16 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்த பின்னர், இப்போது மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் கொரிய நகரமான டேகுவில் இருந்த 27 வயது நோயாளி புதன்கிழமை வியட்நாமுக்குச் சென்றுள்ளார்.

அவர் விமான நிலையத்தில் அடையாளம் காணப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளியன்று, ஐரோப்பாவிலிருந்து வியட்நாமின் தலைநகர் ஹனோய் திரும்பிய 26 வயதான ஒரு பெண் கிருமித் தொற்றிற்கு இலக்காகியிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.


201 பயணிகள் மற்றும் 16 பணியாளர்களைக் கொண்ட விமானத்தில் அவர் பயணித்திருந்தார். அந்த விமானத்தில் இருந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதுடன், அந்த பெண் வசிக்கும் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

எந்த நாடுகள் என்று அல்ல நீங்களும் அவதானமாக இருப்பது மிகச் சிறந்தது என கூறப்படுகிறது.