மட்டக்களப்பு பிரபல தேவாலய ஆராதனைக்குள் புகுந்த 4 முஸ்லிம்கள் அதிரடிக் கைது..!

0

மட்டக்களப்பு புனித செபஸ்ரியான் தேவாலயத்தில் ஆராதனை இடம் பெற்றுக் கொண்டிருந்த போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நான்கு முஸ்லீம்கள் தேவாலயத்துக்குள் அனுமதியின்றிச் சென்ற வேளை ஏற்பட்ட பரபரப்பையடுத்து குறித்த 4 பேரையும் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த தேவாலயத்தில் இன்று ஞாயிறு காலை ஆராதனை இடம் பெற்றுக் கொண்டிருந்தது.

இதன் போது இங்கு இரு பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட முஸ்லீம்கள் ஆலயத்தினுள் நுழைந்துள்ளனர்.

இதன் போது, அங்கு ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்ததையடுத்து அவர்களை பிடித்து ஆலயத்தின் அருட்தந்தையிடம் கொடுத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்பாறை இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண், 39 வயதுடைய வாய் பேசமுடியாத மகள், 23 வயதுடைய மகன், 33 வயதுடைய மருமகன் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் வாய் பேச முடியாத மகளின் நோயை குணப்படுத்துவதற்காக இரு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்துக்கு வந்ததாகவும் அங்கு ஆலயம் பூட்டப்பட்டிருந்ததால், அதன் ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் சென்றார்கள் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் ஏதாவது அசம்பாவிதங்களுக்கான பரீட்சார்த்த சோதனை நடவடிக்கையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.