ஸ்ரீலங்காவை பாதுகாத்து அங்கவீனமான இராணுவத்திற்கே இந்த நிலை என்றால்?

0

புலிகளுடனான யுத்தத்தின் போது தமது அவயங்களை இழந்து அங்கவீனர்களாகவுள்ள படையினர் பல்வேறு குறைபாடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த பல வருடங்களாக தமது தேவைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களை அரசியல் தரப்பினர் தத்தமது அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்திக் கொண்டமையும் அவதானிக்கப்பட்ட விடயங்களாகும்.

கடந்த தேர்தலின் போது அங்கவீனமுற்ற படையினரின் தேவைகளை பூர்த்தி செய்வோம் என்ற பாரிய வாக்குறுதிகளையும் வழங்கியே ராஜபக்ச தரப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். எனினும் அவை தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந் நிலையில் மீண்டும் தமது கோரிக்கைகளை முன் வைத்து கடந்த சில நாட்களாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போரட்டங்களை முன்னெடுத்து வரும் அங்கவீனமுற்ற படையினர், ஜனாதிபதியினால் போராட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திலும் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதன் பொருட்டு அவர்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்புள்ள ஆர்ப்பாட்ட இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டது.

இக்கூடாரங்களை பொலிஸார் நேற்று (25) உடைத் தெறிந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேறு சில ஆர்ப்பாட்டக் காரர்களினால் நாட்டை காப்பாற்றிய இராணுவத்தினருக்கு இழைக்கப்பட்ட இந்த அநியாயச் செயலுக்காக எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மற்றும் குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்கொண்டு செல்வதற்காக குரல் கொடுத்த பல அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள் இம்முறை அவர்கள் பக்கம் இல்லாமை குறித்து கவலையடைவதாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்களும் செயற்பாடுகளும் அரசியல் கட்சி ஒன்றின் லாபத்திற்காக பயன்படுத்தப்படுவதுடன் அதே கட்சியினால் அந்த இராணுவத்தினருக்கு எவ்வித நிவாரணியும் கிடைக்கப் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.