கரைச்சிப் பிரதேச சபையால் மக்கள் மீது சுமத்தப்பட்ட ஆதன வரிக்கு ஆளுநர் ஆப்பு..!

0

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் அதிகரித்த ஆதன வரிக்கு வடக்கு ஆளுநர் ஆப்பு வைத்துள்ளார். பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழரசு கட்சியின் கரைச்சி பிரதேச சபையினர் கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் மீது அதிகரித்த வீதத்தில் ஆதன வரியை அறவிட்டு வந்த நிலையில் பொது மக்கள் அதற்கு எதிராக வடக்கு ஆளுநரிடம் முறையிட்டுமைக்கு அமைவாக ஆளுநர் ஆதன வரியை குறைப்பது தொடர்பில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இலங்கையில் வறுமை அதிகமுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களிடமிருந்து அதிகரித்த வீதத்தில் ஆதன வரி அறவிப்படுவதாக தொடர்ச்சியாக மக்களிடமிருந்து முறை்பபாடுகள் கிடைத்துள்ளன.

எனவே ஆதன வரியை குறைப்பது பற்றி சபையின் அபிப்பிராயத்தை பெற்று அனுப்புமாறு ஆளுநர் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் செயலாளருக்கு முகவரியிட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தை ஆளுநர் சார்பில் அவரின் உதவிச் செயலாளர் கே.எஸ். செல்வநாயகம் ஒப்பமிட்டு அனுப்பியுள்ளார்.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தங்கள் சபையால் (கரைச்சி பிரதேச சபை) அதிகளவான ஆதனவரி அறவிடப்படுவதாகவும் இது வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள தமக்கு மேலும் சுமையை அளிப்பதாகவும் குறிப்பிட்டு ஆதன வரியை குறைப்பதற்கு ஆவன செய்யுமாறு பொது மக்கள் கோரியுள்ளனர்.

இலங்கையின் வறுமை அதிகமுள்ள மாவட்டங்களில் தங்கள் மாவட்டமும் ஒன்றாகும் எனவே பொது மக்களின் இக்கோரிக்கை தொடர்பில் தங்கள் சபையின் அபிப்பிராயத்தைப் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் பணித்துள்ளார்.

எனவே இவ்விடயத்தை சபையில் முன் வைத்து அபிப்பிராயத்தை கௌரவ ஆளுநருக்கு சமர்பிக்க ஏதுவாக எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையால் தற்கால சந்தை பெறுமதியில் சொத்துக்களின் பெறுமதி மதிப்பிடப்பட்டதன் காரணமாக பொது மக்களின் சொத்துக்களின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக அதன் வருடப்பெறுமானமும் அதிகரித்தே காணப்பட்டது இதனால் அப்பெறுமதிக்கு பத்து வீத அதிகரிப்பானது பொது மக்களுக்கு பெரும் சுமையாக இருந்துவந்துள்ளதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் ஏற்பட்டமை என்பதும் குறிப்பிடத்தக்கது.