யாழில் கம்பெரலிய செயற்திட்ட ஒப்பந்தகாரர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்..!

0

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய மீள்குடியேற்றம் மற்றும் அரச ஒப்பந்தங்கள் ஆகியவற்றிற்கான உரிய கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவித்து யாழ். மாவட்ட ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று இடம் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களங்கள் மூலம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை உரிய முறையில் செலுத்தவில்லை என்றும், குறித்த கொடுப்பனவுகளை உடன் பெற்றுத் தருமாறு கோரியும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது போராட்டக்காரர்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

ஒப்பந்தகாரர்களுடைய பிரச்சினைகளை தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தான் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், வெகு விரைவில் நிதியினைப் பெற்றுக் கொடுப்பதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிதிகளும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.