வவுனியாவில் ரெலோவின் 50வது ஆண்டு மாநாட்டில் பெரும் குழப்பம்..!

0

வவுனியாவில் இடம் பெற்ற ரெலோவின் 50 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் மேற்கொண்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன், இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

tamilpori.com

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது மண்டப வாயிலுக்கு வந்த சில இளைஞர்கள் ரெலோவின் கொடியை இறக்க முற்பட்டு, குழப்பத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை ரெலோ உறுப்பினர்கள் தடுக்க முற்பட்ட போது அங்கு தர்க்கம் ஏற்பட்டது.

இதன் போது மேலும் சில இளைஞர்கள் அங்கு வந்து, ரெலோவின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகனின் படத்தை ஏன் முன்னுக்கு காட்சிப்படுத்தவில்லை? ரெலோ இளைஞர்களை கொன்று குவித்த சித்தார்த்தனை உள்ளே விட்்டது யார்? வவுனியாவிலுள்ள அரச தரப்பு அரசியல் பிரமுகர்களை ஏன் நிகழ்விற்கு அழைக்கவில்லை என தர்க்கம் விளைவித்தனர்.

இதற்குள் குழப்பத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் தாக்கப்பட்ட ரெலோ உறுப்பினர் ஓருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ரெலோ தரப்பினரால் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சியொன்றின் பின்னணியில், வவுனியாவில் ரெலோவின் கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க இந்த முயற்சி மேற்கொண்டதாக ரெலோ தரப்பு குற்றம் சாட்டுகிறது.

இதேவேளை யுத்த காலத்தில் பல நூறு ரெலோ உறுப்பினர்கள் புளொட் அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன்; ரெலோ உறுப்பினர்களால் புளொட் உறுப்பினர்களும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.