கோட்டா அரசிற்கு பாரிய ராஜதந்திர அடி; இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத் தடை..!

0

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத் தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இதனை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகத் தன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப் பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில்,

அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகத் தன்மை மிக்க தகவல்கள் கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுவைதற்கு தகுதியற்றவர்கள் என இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 தெரிவிக்கின்றது.

சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைவிதிப்பதற்கு அப்பால் அவருடைய குடும்பத்தவர்களிற்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளும் ஏனைய அமைப்புகளும் முன்வைத்துள்ள ஆவணப்படுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகதன்மை மிக்கவை என அமெரிக்க இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்கா, இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக விதித்துள்ள பயண தடைகளிற்கு கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த தடை சுயாதீனமான ஆராயப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தில் அவரது சிரேஸ்ட நிலையை கருத்தில் கொண்டே சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார் அவரிற்கு எதிராக நிருபிக்கப்பட்ட வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தில் உள்ளவர்களில் சிரேஸ்ட நிலையில் உள்ளதாலேயே சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவ பிரதானி பதவியை வழங்கினார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளமை கரிசனை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய பதவிகளிற்கு நிருபிக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்வி கேட்பது ஏமாற்றமளிக்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவேந்திரசில்வா குறித்த தகவல்களின் நம்பகத் தன்மையை ஆராய்ந்து தனது முடிவை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.