பெப்.14 மாபெரும் போராட்டம்; நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் ஸ்தம்பிதமடையும் அபாயம்..!

0

எதிர்வரும் வெள்ளி 14ம் திகதி மாபெரும் பபோராட்டத்திற்கு அதிபர், ஆசிரிய சங்கங்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்கும் வகையில் அதிபர், ஆசிரிய சங்கங்கள் கூட்டாக முன்னெடுத்த நடவடிக்கைகள் கடந்த ஆட்சி மாற்றத்துடன் முற்றாகச் செயலிழந்தன.

அதன் தொடர்ச்சியாக சங்கங்கள் தற்போதய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்பள முரண்பாடு தீரும் வகையில் இடைக்காலக் கொடுப்பனவை வழங்க இணக்கம் காணப்பட்டன.

அந்த வகையில்,
ஆசிரியர்களுக்கு 5000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையும், அதிபர்களுக்கு 6000 ரூபாய் முதல் 17,000 ரூபாய் வரையும் இடைக்கால கொடுப்பனவாக வழங்க இணக்கம் காணப்பட்ட போதும் அது இன்றுவரை காலம் கடத்தப்பட்டு வருகின்றது.

ஒரு ஆசிரியர் மற்றும் அதிபர் என்பவர் கற்பித்தலுக்கு அப்பால் பல்வேறு கடமைகளை ஆற்றுகின்ற போதும் மேலதிக நேரக் கொடுப்பனவோ, போக்குவரத்து கொடுப்பனவோ, ஏனைய சலுகைகளோ வழங்கப்படாது தமது சொந்தப் பணத்தையே செலவு செய்யும் அவல நிலை காணப்படுகின்றது.

சாதாரண கூலித் தொழிலாளி ஒருவருக்கே 2000 ரூபாய் கூலி கிடைக்கின்ற நிலையில் ஒரு சமூகத்தையே உருவாக்கும் இவர்களுக்கான ஊதியம் சராசரியாக நாளன்றுக்கு அண்ணளவாக 950 ரூபாய் காணப்படுகின்றது.

பட்டம் உள்ளிட்ட உயர் தகைமை உள்ள போதும் இலங்கையில் ஆசிரியர்களுக்கான ஊதியம் என்பது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

எனவே இந்த நிலையை கருத்தில் எடுத்து இரண்டு கிழமைக்குள் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளி(14) காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சகல அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சங்கங்களும் இணைந்து கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இதனால் குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக் கிழமை பாதிப்படையக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.