இலங்கையின் பொருளாதாரம் முற்றாக செயலிழப்பு – தடுமாறும் கோட்டா அரசு

0

2019 நவம்பர் 20ஆம் திகதி வரை நாட்டை ஆட்சி செய்த ரணில் அரசின் தூரநோக்கற்றதும் வினைத்திறன் அற்றதுமான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக நாட்டின் முழுப் பொருளாதாரமும் செயலிழந்திருப்பதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

இது விவசாயம், இலவச சுகாதார சேவை, நிர்மாணக் கைத்தொழில், உணவுப் பொருள்கள் விநியோகம், தேயிலைக் கைத்தொழில், அரிசி உற்பத்தி போன்ற முக்கிய துறைகளின் வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்புவைத்த சிறப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொருளாதாரம் செயலிழந்திருப்பதற்கு அடிப்படை காரணம் சேவைகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படாது இருந்தமையாகும்.

கடந்த அரசு 2019ஆம் ஆண்டிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த வரவுசெலவு மதிப்பீடுகளில் உள்ளடங்கியிருந்த சகல நிதி ஒதுக்கீடுகளையும் கடந்த நவம்பர் மாதம் ஆகும்போது செலவு செய்திருந்தது.

இதனால் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் அந்த அரசினால் மேற்கொள்ளப்பட்டிருந்த பல செலவீனங்களுக்கு நிதி வழங்க திறைசேரியினால் முடியவில்லை.

2019ஆம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த அரசின் வருமானம் 2 ஆயிரத்து 400 பில்லியன் ரூபாயாகும். அதில் டிசெம்பர் மாதம் ஆகும்போது கிடைக்கப்பெற்றிருந்த நிதி ஆயிரத்து 800 பில்லியன் ரூபாயை தாண்டவில்லை.

இதனால் அரச வருமானம் ஆரம்ப மதிப்பீட்டினை விட சுமார் 600 பில்லியன் ரூபாயால் குறைந்துள்ளது. இதனால் வருட இறுதியாகும் போது இரண்டு மாதங்களுக்கும் அதிகமான காலம் செய்யப்பட வேண்டிய பெரும்பாலான கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருக்கவில்லை என அரசு சுட்டிக் காட்டியுள்ளது.

2019 நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த செலவுகளில் தீர்க்கப்படாமல் உள்ள செலவு ஆயிரத்து 188 மில்லியன் ரூபாயாகும். வைத்திய சாலைகளில் மருந்துகள் மற்றும் வழங்கல்களுக்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய நிதியில் 25 ஆயிரத்து 696 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டிருக்கவில்லை.

மூத்த குடிமக்களுக்கான வட்டி மானியங்களுக்காக நிதி அமைச்சு வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ள தொகை 45 ஆயிரத்து 856 மில்லியன் ரூபாயாகும். உர மானியத்திற்காக உரங்களை வழங்குபவர்களுக்கு 23 ஆயிரத்து 950 மில்லியன் ரூபாய் வழங்கப்பட வேண்டியுள்ளது.

நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணிகளுக்காக செலுத்தப்படாதுள்ள தொகை 18 ஆயிரத்து 449 மில்லியன் ரூபாயாகும். கம்பரெலிய கருத்திட்டங்கள், வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றிற்காக செலுத்தப்படாமல் உள்ள நிலுவைப் பணம் 3 ஆயிரத்து 126 மில்லியன் ரூபாயாகும். நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய வேலைத் திட்டங்களுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ள தொகை 6 ஆயிரத்து 558 மில்லியன் ரூபாயாகும். இவை செலுத்தப்பட வேண்டியுள்ள நிலுவை தொகை தலைப்புகளில் ஒரு சில மட்டுமேயாகும்.

செலுத்தப்பட வேண்டிய தொகை நிலுவையாக உள்ள காரணத்தினால் பெரும் நெருக்கடி நிலமைகள் ஏற்பட்டுள்ளது.

உரக் கூட்டுத்தாபனம், உர இறக்குமதி மற்றும் விநியோகத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

அரச உரக் கம்பனிகள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் நெற் செய்கைக்கான உரத்தை வழங்கிய போதும் ஏனைய பயிர்களுக்கான உர விநியோகம் சீர்குலைந்துள்ளது. மொத்த விவசாயத்துறையும் பின்னடையக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

புற்றுநோய் வைத்தியசாலை உள்பட அனைத்து வைத்தியசாலைகளுக்கும் உரிய முறையில் மருந்துப் பொருள்களை வழங்க முடியாமல் உள்ள காரணத்தினால் இலவச சுகாதார சேவையும் சீர்குலைந்துள்ளது. உள்நாட்டு கட்டட நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தரளவிலான சுமார் 700 நெல் ஆலைகளில் அரைவாசிக்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளன. 400க்கும் அதிகமான தேயிலைத் தொழிற்சாலைகள் செயலிழந்து காணப்படுகின்றன.

அரச வங்கி முறைமையும் வினைத்திறனற்ற முகாமைத்துவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி ஆகியவற்றின் பணிப்பாளர் சபை மற்றும் நிறைவேற்று அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளை கருத்திற்கொள்ளாமல் பிணைகள் இன்றி கடன்கள் வழங்கப்பட்டிருப்பதனால், அக்கடன்களை அறவிட முடியாத நிலை உள்ளது. அது 72 பில்லியன் ரூபா அல்லது 7200 கோடிகளாகும். அவை சிறப்பு நபர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் என தெரியவந்துள்ளது.

உரிய அனுமதியோ தேவையான நிதி ஏற்பாடுகளோ இன்றி விதி முறைகளுக்கு புறம்பாக கடந்த அரச ஊழியர்களை ஆள்சேர்ப்பு செய்திருப்பதுவும் மற்றுமொரு பிரச்சினையாகும். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆகும். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நட்டம் 10 ஆயிரம் மில்லியன் ரூபாயாகும்.

இவ்வாறான பொறுப்பற்ற ஆள்சேர்ப்புகள் மற்றும் செயலாற்றும் திறனின்மையை நீக்கப்படாமல் விலைச் சூத்திரத்தை நடைமுறைப்படுத்தி மக்கள் மீது சுமையை ஏற்படுத்துவது நியாயமானதல்ல என்றும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்திற்கும் கலாசார நிதியத்திற்கும் ஆயிரத்து 430பேர் மேற்கூறியவாறு ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். கலாசார நிதியத்தின் சட்டத் திட்டங்களுக்கு ஏற்ப அதன் நிதி கலாசார மற்றும் தொல்பொருள் பராமரிப்புகளுக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசு இந்த பிரச்சினையிலிருந்து பொருளாதாரத்தை மீற்பதற்கான உறுதிப்பாட்டுடன் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வரவுசெலவு திட்ட நிலுவையை 2025ஆம் ஆண்டாகும்போது 04% வீதமாகவும் தற்போது 80% வீதமாகவுள்ள அரச கடனை 70% வீதமாக குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது அரசின் பொறுப்பாகுமென்பதால் மிக விரைவில் அவர்களுக்கு தொழில்களை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. உயர்கல்வி வாய்ப்புக்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

தேயிலை, கறுவா, மிளகு மற்றும் ஏனைய பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்து ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. கரும்பு செய்கையை அபிவிருத்தி செய்து சீனி மற்றும் எதனோல் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மர முந்திரிகை பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 10 அத்தியாவசிய பொருள்களை நிவாரண அடிப்படையில் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மார்ச் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மூடி விடுவதற்கு அல்லது தனியார்மயப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவை முழு அபிவிருத்திக்கும் பங்களிக்கக்கூடிய வகையிலான நிறுவனமாக மாற்றப்படவுள்ளது.

தேசிய விமான சேவையினால் மேற்கொள்ளக்கூடிய பணி கோரோனா தொற்று ஆபத்திற்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வர மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது.

2019, 2020 பெரும்போக அறுவடை தற்போது ஆரம்பித்துள்ளது. நெல்லுக்கு கிலோ ஒன்றிற்கு 50 ரூபா குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை வலுவூட்டி மொத்த விவசாய முறையையும் முன்னேற்றுவதற்கு முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் கோட்டா அரசு குறிப்பிட்டுள்ளது.