வவுனியாவிலும் கொரோனா அறிகுறியுடன் யுவதி; யாழ் வைத்திய சாலைக்கு அனுப்பி வைப்பு..!

0

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 24வயதுடைய வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் இன்று (05.02.2020) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் ஆர்.கேசவன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவை சேர்ந்த 24வயதுடைய குறித்த யுவதி சீனா நாட்டிற்கு கல்விக்காக சென்ற நிலையில் கடந்த 28ம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமன் இருந்தமையினால் குறித்த யுவதி சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கு இன்று (05.02.2020) காலை சென்று அவரது விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி கொரோனா வைரஸின் மையமான சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெகு தொலைவில் வசித்துள்ளார். எனினும் மெல்லிய காய்ச்சல் மற்றும் தடிமல் போன்ற விடயங்கள் கோரோனா வைரஸின் அறிகுறிகளாக இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் ஒதுக்கப்பட்ட விசேட விடுதியில் தங்க வைக்கப்பட்டார்.

மேலும் மேலதிக சிகிச்சைக்காக வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்திய சாலையான யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாலை 3.00 மணியளவில் நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் யாழ் போதனா வைத்திய சாலையில் குறித்த யுவதிக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்ட பின்னரே குறித்த யுவதி கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளரா? என்ற விடயத்தினை உறுதிப்படுத்த முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.