வடக்கில் இராணுவத்தின் சோதனை கெடுபிடிகள் எதுவும் இல்லையாம் – டக்ளஸ்

0

வடக்கில் சோதனை சாவடிகள் அமைத்து மக்களை வஞ்சிக்கும் செயற்பாடு இடம் பெறுவதாக சபையில் சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி முறையிட்டார்.

ஈஸ்டர் தாக்குல் இடம் பெற்று நீண்ட காலத்தின் பின்னரும் கூட அந்த நிலை தொடர்வதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

வடக்கில் சோதனை சாவடிகள் அமைத்து தமிழ் மக்களை வஞ்சிக்கும் எந்த செயற்பாடும் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் கண்ணை திறந்து கொண்டே வடக்கில் பயணிக்கிறேன், என்றும் தனது கண்களுக்கு அவ்வாறு எதுவும் தவறாக தெரியவில்லை எனவும் அவர் பதில் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இது குறித்து கேள்வி எழுப்பிய போது டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதேவேளை அண்மைக் காலமாக வன்னிப் பிரதேசத்தில் சோதனை சாவடிகள் அமைத்து படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வரும் நிலையில் கெளரவ அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மாங்குளத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் 3 – 4 இடங்களில் பயணிகள் இறக்கி இராணுவத்தால் சோதனை செய்யப்படும் நிலை காணப்படுகின்றது.

போதைப்பொருள் தடுப்பு என்ற போர்வையில் இவ்வாறான கெடுபிடிகள் சாதாரண பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்பது தெரியாதா? போதைப் பொருட்கள் இலங்கையின் கடற்பகுதியின் ஊடாகவே நாட்டுக்குள் வருகின்றது. அதனை தடுக்க வேண்டிய கடற்படை தூங்குகிறதா? என்ற கேள்விக்கும் குறித்த அமைச்சர் பதில் தேட வேண்டும்.

இதேவேளை கம்பெரலிய சுகத்தில் திளைத்த கூட்டமைப்பு கோமாவில் இருந்து எழுந்தா கதைக்கின்றது? கடந்த காலத்தில் சுமந்திரன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் கூட்டங்களில் தமிழர் மீது பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையின் சோதனைகள் இடம் பெற்றது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.