தமிழ்மொழி புறக்கணிப்பு; கோட்டாவின் குகைக்குள் ஒலித்த முதல் உறுமல்..!

0

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் பாடும் போது தமிழ் மொழியிலும் பாடுவதை தவிர்த்தமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய மலையக தேசிய முன்னணி தனது கண்டனத்தை ஜனாதிபதி கோட்டாபாயவிற்கு சமூக வலைதளமூடாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. அதில்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே,

தேசிய கீதம் பாடும் போது தமிழ் மொழியிலும் பாடுவதை தவிர்த்ததன் மூலம் நீங்கள் உங்களுக்கு வாக்களித்த 64 இலட்சம் சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தினீர்கள். ஒரு பக்கம் இது சிறந்ததொரு ராஜதந்திர நகர்வாக இருக்கலாம்.

அதேநேரம் இந்த செயலால் உங்களுக்கு வாக்களித்த 5 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களின் மனங்களை காயப்படுத்தினீர்கள் என்பதையும் மறவாதீர்கள்.

உங்களுக்கு சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் தமிழ் மொழியை புறக்கணிக்கும் போது அதைத் தட்டிக்கேட்க எம்மிடம் இருக்கும் ஒரே காரணம், நாம் தமிழை நேசிக்கும் தமிழர்கள் என்பதாகும்.

இந்த தேசத்தை நான் எந்த அளவு நேசிக்கின்றேனோ அதே அளவு எனது தாய்மொழி தமிழையும் நான் நேசிக்கின்றேன். இதை நான் எவருக்காகவும் விட்டுக் கொடுக்க தாயாராக இல்லை.

எந்த ஒரு பிரஜைக்கும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும் தனது தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடவும் இருக்கும் உரிமையை பாதுகாக்கும் கடமை உங்களுக்கு இருக்கின்றது. ஏனென்றால் நீங்கள் இலங்கை திருநாட்டில் வாழும் அனைவருக்குமான ஜனாதிபதி. இந்தக் கடமையிலிருந்து நீங்கள் ஒருபோதும் பின்வாங்க முடியாது.

உங்களின் இந்த செயலால் மனவருத்தம் அடைகின்றேன். இப்படியான செயல்களால் நிச்சயம் சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்பதையும் சுட்டிக்காட்ட கடமை பட்டுள்ளேன்.

உங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த கடந்த ஐந்து வருடங்களாக போராடி உழைத்தவன் என்ற உரிமையில் இதை கூறுகின்றேன், தவறுகள் இடம் பெறும் போது என்னால் மௌனியாக இருக்கவோ அல்லது ஜால்ரா போடவோ முடியாது. மிகுந்த மனவேதனையில் இதனை நான் பதிவிடுகின்றேன். நான் கூறுவதில் தவறுகள் இருந்தால் மன்னியுங்கள்.

(இந்த மடல் ஜனாதிபதி அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.)

ரிஷி செந்தில் ராஜ்
தலைவர் – மலையக தேசிய முன்னணி.

எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கில் மொட்டின் கம்புகளாக சலுகைகளை அனுபவிப்போர் பேசா மடந்தைகளாக உள்ள நிலையில் இவரின் இத்தகய துணிச்சலான செயலை நாமும் தமிழனாக பாராட்டுவோம்.