தமிழ் மாணவர்கள் கல்வியில் காட்டும் ஊக்கம் தாழ்ந்து செல்வது கவலைக்குரியது..!

0

இன்றைய தினம் யாழ் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையின் வருடாந்த மெய் வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சரின் உரை,

இன்றைய இந் நிகழ்வை தலைமையேற்று நடாத்திக் கொண்டிருக்கின்ற இப் பாடசாலையின் அதிபர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவ மணிகளே, இப் பாடசாலையின் அபிவிருத்திக்குழு அங்கத்தவர்களே, பெற்றோர்களே, குழந்தைகளே..!

இன்றைய தினம் யாழ் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலையின் வருடாந்த மெய் வல்லுனர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் காலப் போக்கில் கற்றல் விடயங்களை மட்டும் கருதிற் கொள்ளாது இணைபாட விதான செயற்பாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகள் போன்ற இதர செயற்பாடுகளிலும் மாணவ மாணவியரை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிக் கொணர்கின்ற ஒரு நல்ல செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளமை பெருமைக்குரியது.

மாணவர்கள் வெறும் கல்வி செயற்பாடுகளுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்திவிடாது அவர்களின் உடல் வலிமை, மன வலிமை, விட்டுக் கொடுக்குந் திறன், பொறாமையற்ற போட்டித் தன்மை ஆகிய விடயங்களில் தம்மை வளர்த்துக் கொள்ள விளையாட்டுப் போட்டிகள் மிகவும் உதவுகின்றன.

நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் எமக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்து விட்டால் தாமும் ஒரு விளையாட்டு வீர, வீராங்கனை போல களத்தில் இறங்கி உச்சி வெயிலில் எமக்கு முறையான பயிற்சிகள் அளித்து எம்மைப் போட்டியில் ஜெயிக்கச் செய்வதே குறியாக இருப்பார்கள்.

எனினும் விளையாட்டுப் போட்டிகள் முடிந்த கையோடு இடையில் தடங்கி நின்று போன பாடவிதான செயற்பாடுகளை மிகவும் உன்னிப்புடன் தாமே கற்பித்து அல்லது வேறு ஆசிரியர்களின் ஊடாகக் கற்பித்து எம்மை சமநிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

இன்று அவ்வாறான பொறுப்புணர்வு எம் ஆசிரியர்களிடம் இருக்கின்றதா என்பது நீங்கள் கூறினால் தான் நான் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் ஆசிரியர்கள் தான் எம்மை ஆக்குபவர்கள். அவர்களின் பொறுப்புணர்ச்சி, உத்வேகம், உதவி மனப்பான்மை யாவும் எம்மை சாதாரண மாணவர் தரத்தில் இருந்து விசேட தகுதி பெற்றவர்களாக மாற்றக் கூடிய வல்லமை பெற்றவை.

குருவுக்கும் சீடருக்கும் இடையில் இருக்கும் உறவு தெய்வீகமானது. விளையாட்டுக்கள் என்று வந்து விட்டால் ஒரு பயிற்றுவிப்பாளர் தனது மாணவர்களிடையே இருக்கும் திறமைகளை உன்னிப்பாகக் கவனித்து அறிந்து கொள்ள வேண்டும்.

மாணவர் எந்த விளையாட்டில் பிரகாசிக்க வல்லவர் என்று கண்டு அவருக்குப் பயிற்சி அளிக்குந் திறனை பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கொண்டிருக்க வேண்டும். அண்மையில் ஒரு படம் பார்த்தேன்.

குழந்தை ஒருவர் வலது குறைந்தவர். யூரவளைஅ எனப்படும் மன இறுக்கக் குறைபாட்டைக் கொண்டவராக இருந்தார். ஆனால் தன் மகனை ஒரு சிறந்த விளையாட்டு வீரனாகப் பார்க்க வேண்டும் என்று தகப்பனார் கனவு காண்கிறார். ஆசிரியர்கள் குறித்த வலது குறைந்தவரை தமது சீடராக ஏற்க மறுக்கின்றார்கள். தகப்பன் தானே பயிற்றுவிப்பாளராக மாறி மகனை முன்னேற்றுவிக்கின்றார்.

விளையாட்டு ஆசிரியர் ஒருவர் அந்த வலது குறைந்தவர் ஓடும் விதத்தைப் பார்த்து இவர் நீண்ட தூர மரதன் ஓட்டத்தில் பங்குபற்றவே இலாயக்குள்ளவர் என்று அடையாளம் காண்கின்றார். பல சோதனைகளின் பின்னர் குறித்த மாணவர் மரதனில் முதல் இடம் பெறுகின்றார்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஆசிரியர்களின் உன்னிப்பான கவனமும், மாணவர்கள் மீதான நம்பிக்கையூம், மாணவர்களின் உள்ளார்ந்த தகமைகளை அடையாளங் காணும் தன்மையையே. ஒவ்வொரு மாணவரிலும் ஏதோ ஒரு திறமை குடிகொண்டு இருக்கின்றது. அவற்றை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை.

அடுத்து நாம் பெற்றோர்களின் கடமைகளை ஆராய்வோமாகில் அவர்களுக்கென்று ஒரு பாரிய சுமை இன்று உள்ளதை உணரலாம். மாணவர்களின் கைகளில் போதையை ஊட்டவல்ல பொருட்கள் வழங்கப்படுகின்ற ஒரு புதிய கலாசாரம் தற்போது உருவாகியுள்ளது.

பெற்றோர்களின் அசமந்தப் போக்கே இவ்வாறான செயற்பாடுகளுக்கு மூல காரணமாக அமைகின்றது. அக்காலத்து மாணவர்கள் தமது ஓய்வு நேரத்தின் மிகக் கூடுதலான பொழுதை புத்தகங்களை வாசிப்பதிலேயே செலவிட்டார்கள். அதனால் அவர்களின் அறிவு மொழித் திறன் ஆகியன சிறப்பாக வளர்ச்சி பெற்றன.

அன்றைய மாணவர்களின் அறிவுத் தேடலுக்கான கருவியாக புத்தகங்கள் மட்டுமே உதவின. அதனால் மாணவர்கள் நூல் நிலையங்களில் தமது பொழுதைக் கூடுதலாக செலவிட்டனர். இன்று இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக மாணவர்களுக்குத் தேடல் என்பது மிக எளிமையாக்கப்பட்டுள்ளது. கணனித் துறையின் வளர்ச்சி இதற்கு மிகுந்த ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளது.

ஆனாலும் மாணவ மாணவியர் கல்வியில் காட்டுகின்ற ஊக்கம் நேரெதிராகத் தாழ்ந்து சென்று கொண்டிருப்பது கவலைக்குரியது. அவர்கள் தமது ஓய்வு நேரத்தின் மிகக் கூடிய பகுதியைப் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் செலவழிக்கின்றார்கள்.

சினிமா, ரீ.வி, முகநூல் என அவர்களின் அவதானங்கள் கல்வியில் இருந்து தடம் பெயர்ந்து செல்கின்றது. இன்று மோட்டார் சைக்கிள் இல்லாத ஒரு மாணவனைக் கூட அவதானிக்க முடியாமல் இருக்கின்றது. தலைக்கவசம் அணியாது 150 – 200 கி.மீ. வேகத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்துவது அவர்களின் குறியாக இருக்கின்றது. விபத்துக்கள் இடம் பெறுகின்ற போதுதான் அதன் உண்மையான தார்ப்பரியம் உணரப்படுகின்றது. அப்போது காலம் கடந்து விடுகின்றது.

இங்குதான் பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமாகின்றது. தமது பிள்ளைகளை உருவாக்கி இந்த உலகத்துக்குக் கொண்டு வந்த பொறுப்புடன் தமது கடமை தீர்ந்துவிட்டது என எமது பெற்றோர்கள் பலர் நினைக்கின்றார்கள்.

குழந்தைகள் வளர்வதை, அவர்கள் வளரும் சூழலை உன்னிப்பாகக் கவனிக்க மறுக்கின்றார்கள். குழந்தைகள் பற்றிக் கண்ணும் கருத்துமாக இருக்கப் பழக வேண்டும். எமது பெற்றோர்கள். தாய் தந்தையர் பிள்ளைகளின் நம்பிக்கையைப் பெற ஆவன செய்ய வேண்டும். எவ்வாறான சூழலுள் அவர்கள் வளர்கின்றார்கள் என்பதை பெற்றோர்கள் பலர் ஒன்று கூடி ஆராய வேண்டும்.

வெளிநாட்டுப் பணம் கிடைக்கின்றது என்று மோட்டார் சைக்கிள்களையும், புதிய புதிய செல்போன்களையும் குழந்தைகளுக்கு அவர்களின் சிறுவயதிலேயே கொடுத்து அவர்களைப் பழுதாக்காதீர்கள்.

குழந்தைகளை முன்னேற்ற ஒரு வழியூண்டு. குதிரைக்கு முன் கரட்டைக் கட்டிவிடுவது போல “நீ படிப்பில் இவ்வாறான சித்தி அடைந்தால் அல்லது விளையாட்டில் இவ்வாறான வெற்றி அடைந்தால் உனக்கு மோட்டார் சைக்கிள் அல்லது கணனி அல்லது செல்போன் போன்றவற்றை வாங்கித் தருவதாகக் கூறி அவற்றை அவர்களுக்கு உடனே வழங்குவதைத் தாமதப்படுத்துங்கள்.

சித்தி அடைந்தால் அதற்கான பரிசு கிடைக்கும் என்ற எண்ணத்தை நாம் வளர்க்க வேண்டும். குழந்தைகளின் உருமாற்றத்தை அப்போதிலிருந்து உன்னிப்பாகக் கவனியுங்கள். இது ஒரு வழி. ஆனால் போதைப்பொருள் பாவனையைக் கண்டு பிடிப்பது மிகவும் சிரமம். பெற்றோர்கள் பலர் சேர்ந்து இவற்றைப் பற்றி அறிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எமது மாணவச் செல்வங்கள் சீர்கெட்டுப் போவதை பெற்றோர்களான நாமே தடுக்க வேண்டும்.

அன்பார்ந்த குழந்தைகளே எனதருமை மாணவச் செல்வங்களே, இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் நிலைபற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

பெரும்பான்மையின மக்கள் இலங்கை காவற்படைகளில் சேர்ந்து முழு ஒத்துழைப்புடன் காரண காரியங்களை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றார்கள். ஏதோ வழியில் அவர்களுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகின்றது. எம்மவர்களோ எதிர்கால தூரநோக்கு எதுவும் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இது எமது அழிவூக்கு வழிகோலப் போகின்றது. இந்த நாட்டில் தமிழ் இனம் என்றதொரு சமூகம் முற்காலத்தில் வாழ்ந்து வந்தது என்ற சரித்திரக் குறிப்புக்களை உருவாக்குகின்ற செயற்பாடாகவே எமது சிரத்தையின்மையையும் போதைக்கு அடிமையாவதையும் பார்க்கின்றேன். எமது இனம் புகழ்பெற்ற இனம். ஒரு வட இந்தியர் ஒருமுறை என்னிடம் கூறினார்.

“உங்கள் நாவலர் தொடக்கிய திருப்பணியே எம்மை மத ரீதியாகக் காப்பாற்றியது” என்றும் மேலும் “அவர் காலத்தில் எம்மக்கள் சிரத்தையற்ற சமய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார்கள்” என்றும் கூறினார். அதாவது மதம் கூட மக்களுக்குச் சிரத்தையும் ஈடுபாடும் இருந்தால்த்தான் வளர முடியும் என்ற கருத்தை உலகிற்கு அறிவித்தவர் நாவலர்.

எமது மக்கள் பலர் இன்று வெளிநாடுகளில் சிறந்த பொருளாதார நிபுணர்களாகவும், வைத்திய சிரோமணிகளாகவும், பொறியியலாளர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் புகழ் பெற்று வாழ்ந்து வருகின்றார்கள்.

எம்முள் ஏதோ ஒரு தகைமை, உத்வேகம், பெருமை நிறைந்திருப்பதை எமது புலம் பெயர் சகோதர சகோதரிமார் காட்டி வருகின்றனர். எம்மால் முடியும் என்பதைப் பறைசாற்றி வருகின்றனர். இது கல்வியிலுந் தான், இசை, விளையாட்டு போன்ற இதர செயற்பாடுகளிலுந்தான்.

ஆனால் உள்ளுரில் நாங்கள் எமது பாரம்பரிய பெருமைகளைக் குழி தோண்டிப் புதைத்து வருகின்றோம். இந்த நிலை மாற வேண்டும். இதனை மாற்ற வல்லவர்கள் எமது பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்லூரிகளின் அனைத்துத் தரப்புக்களுமே.

இவர்கள் அனைவரும் உண்மை நிலையை உணர்ந்து கொண்டு இதய சுத்தியுடன் செயலாற்ற முன் வரும் போதே எமது மாணவ சமுதாயம் உயர்நிலை அடையும்.

இன்றைய விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பற்றிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டு இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த அனைவருக்கும், சிறப்பாக திரு.சரவணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியறிதல்களைத் தெரிவித்து விடைபெறுகின்றேன் எனத் தெரிவித்தார்.