கோட்டாபாய அரசின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு; தேர்தலின் பின்னரே..!

0

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதும் தேர்தல் வரையில் நியமனம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு பூராகவும் உள்ள கல்வி அறிவு குறைந்த ஒரு லட்சம் இளைஞர்களிற்கு வேலை வாய்ப்பு என்னும் பெயரில் தற்போது நாடு பூராகவும் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக விபரம் திரட்டப்பட்டு அடுத்த மாதம் நேர்முகத் தேர்வு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 350 பேர் விகிதம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு பிரதேச செயலகங்கள் மட்டுமன்றி கட்சி அலுவலகங்களிலும் மிகவும் வேகமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

எனினும் இவ்வாறு விபரங்களை பெறுவது தேர்தல் நடவடிக்கைகளிற்கு மட்டுமே உதவும் எனவும் தேர்தல் வரையில் எந்த நியமனத்திற்கும் சந்தர்ப்பமே இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது.

குறித்த நியமனத்திற்கான திறைசேரி அனுமதியானது இதுவரை பெறப்படவில்லை என்பதுடன் அனுமதிக்கான விண்ணப்பமும் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம் ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட்டு முதல் 6 மாத காலத்திற்கு 22 ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு நியமித்தால் மாதம் ஒன்றிற்கு ம்பளமாக 220 கோடி ரூபா பணம் தேவை ஏற்படும்.

தற்போதைய சூழலில் கடந்த ஆண்டு வரை இடம் பெற்ற வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளிற்கான கொடுப்பனவே இன்றுவரை வழங்காத சூழலில் இவ்வளவு பெரும் தொகை நிதி ஒதுக்கீடு செய்வதற்கான சந்தர்ப்பமே கிடையாது என்பதனால் நியமனத்திற்கான சந்தர்ப்பமும் இல்லை எனத் தெரிய வருகின்றது.