விவசாயிகளை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்; ஆளும் கட்சி எம்பி மஸ்தான்..!

0

தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தையும் பண்ணைத் தொழிலையும் பல்வேறுபட்ட காரணிகளால் செய்ய முடியாமல் அல்லலுறும் மக்களின் அவல நிலையை போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் வலியுறுத்தினார்.

வட மாகாண கமநல, விவசாய,நீரப்பாசன கால்நடை அபிவிருத்தி, நீர்வழங்கள் அமைச்சினால் மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடத்தின் சிறந்த விவசாயிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களை கெளரவிக்கும் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றிய போது,

இன்று விவசாயிகளுக் கெதிராக வரட்சி,நிர்ணய விலையின்மை,சந்தை வாய்ப்பு குறைவு ஆகிய பிரச்சினைகள் பூதாகரமாக எதிர் கொள்கின்ற அதே வேளை மேய்ச்சல் தரையின்மை கால்நடைகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளை பண்ணையாளர்கள் எதிர் நோக்குகின்றனர்.

இந்த நிலையில் விவசாய இரசாயனங்களின் பாவனை நிலக்கீழ் நீரை மோசமாக பாதித்து சிறுநீரக வியாதிகளை உண்டு பண்ணி வருகின்றது. இந்த துயர நிலைகளிலிருந்து எமது நாட்டின் ஜீவனோபாயத் தொழிலை செய்து வரும் விவசாய பெருமக்களை பாதுகாக்க அரசு முன் வந்தாக வேண்டும்.

விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக்களை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலம் எமது தாய்நாட்டில் அபிவிருத்தி அதிகரிப்பது மாத்திரமன்றி விவசாயத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக எம்மை வளர்த்து விட முடியும்.

விவசாயத்திற்கு பெயர் போன மாதோட்ட பூமி எமது மன்னார் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. அந்த பொன்விளையும் பூமியில் சிறந்த விவசாயிகளாக தெரிவு செய்யப்பட்ட உங்களையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களது விவசாய நடவடிக்கைகள் வலுப்பெற்று விருத்தி காண நானும், அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார். இவ்விழாவில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விருதுகள் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப்.K.M.A.சுகூர் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வுக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர், மாகாண விவசாய அமைச்சின் கணக்காளர். மற்றும் திணைக்கள அதிகாரிகள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.