தனிநாடு கோருகின்ற நிலைக்கு தமிழர்களைத் தள்ளுகிறீர்களா – ஜே.வி.பி

0

தனிநாடு கோரி முப்பது வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போருடன் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டார்கள். அவர்கள் தற்போது பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் தங்கள் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் அவர்களைப் புறக்கணிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மீண்டும் அவர்களைத் தனிநாடு கோரும் நிலைக்கே தள்ளிவிடும்.

எனத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் இம்முறை சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசின் இந்த இனவாத அறிவித்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம். தமிழ் மொழி தேசிய மொழி. அது அரச கரும மொழி. எனவே, சிங்களத்துடன் தமிழிலும் தேசிய கீதம் பாடுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? என்ன முரண்பாடு இருக்கின்றது? சுதந்திர தினத்தில் கட்டாயம் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்.

தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலும் தமிழ் மொழியை அவமதிக்கின்ற வகையிலும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு கோட்டாபய அரசு உடன் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் அது நாட்டின் நல்லிக்கணத்துக்குப் பாதகமாக அமையும். அது மீண்டும் ஒரு தனி நாட்டுப் போருக்கும் தனி நாட்டிற்கும் வழி வகுக்கும் எனத் தெரிவித்தார்.