நான்காவது வருடமாக புறக்கணிக்கப்படும் வவுனியா; நடவடிக்கை எடுப்பாரா புதிய ஆளுநர்?

0

நான்காவது வருடமாக இம்முறையும் கழகங்களுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வுகளை வவுனியா மாவட்டத்தில் நடத்தாது மாகாண விளையாட்டு அமைச்சும், மாகாண விளையாட்டுத் திணைக்களமும் புறக்கணித்துள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

2020ம் ஆண்டுக்கான கழகங்களுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வுகள் இம்முறையும் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள போதும் கடந்த வருடங்களைப் போல் இம்முறையும் நிகழ்வுகள் எதனையும் வவுனியாவில் நடத்தாது வவுனியாவை புறக்கணித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் வாயிலாகவும், வடக்கு மாகாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வவுனியா மாவட்டத்தில் நிகழ்வுகளை புறக்கணித்தமைக்கான காரணங்களை தமிழ்பொறி கண்டறிந்துள்ளது.

அந்த வகையில் வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கும், மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளருக்கும் இடையில் காணப்படும் தனிப்பட்ட முரண்பாடுகள் மற்றும் கருத்து மோதல் காரணமாக தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முரண்பாடுகளுக்காக சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட வவுனியா மாவட்டத்தை தொடர்ச்சியாக புறக்கணிப்பதை வன்மையாகக் கண்டிப்பதுடன், இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுனர் விசாரணைகளை மேற்கொண்டு விளையாட்டு நிகழ்வுகளை வவுனியாவிலும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இவ்வாறான செயல்களில் ஈடுபடும், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் தொடர்ச்சியாக வெளி மாவட்டங்களில் போட்டிகள் நடத்தப்படுவதால் பண ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வவுனியா மாவட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு நிதி உதவிகளின் மத்தியில் உள்ள யாழ் வீரர்களுக்கு மத்தியில் திறமையை மூலதனமாக கொண்டு பல்வேறு நெருக்கடியின் மத்தியில் விளையாட்டுத் துறையை வளர்த்து வரும் வவுனியா வீரர்களை போட்டிக்கு அழைத்து மந்தைகளை போல் வெளி மாவட்டங்களில் உள்ள பாடசாலை மண்டபங்களில் தங்க வைக்கும் அவலமும் தொடர்கின்றது.

எனவே தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் நீதியான முறையில் எமது மாவட்டத்திலும் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்த ஆவன செய்யுமாறு விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.