ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 14ஆவது நினைவு தினம் இன்றாகும்..!

0

2006ஆம் ஆண்டு தமிழர் தலைநகர் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 14ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று (25) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்” எனும் தொனிப் பொருளில் குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உயிர் நீத்த ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியருகே உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் சத்தியசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்கள், மதகுருமார், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உலக மக்களின் உரிமைக்காகவும் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் ஜனநாயக வழியில் போராடி இன்றைய தினத்தில் பலியாகிய அனைத்து ஊடக நண்பர்களுக்கும் தமிழ்பொறி தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.