கோட்டாவின் ஆட்சியில் மட்டு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்..!

0

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டுள்ளன. குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு. ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது.

மட்டு. ஊடக அமையத்திற்குள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர்கள் சென்று அலுவலகத்தை திறந்த போது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

குறித்த துண்டு பிரசுரத்தில், “எச்சரிக்கை! எச்சரிக்கை! இவர்கள்தான் வெளிநாட்டுப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ்.

இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு துண்டு பிரசுரத்தில் ஊடகவியலாளர்களின் ஒளிப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

இதேவேளை அண்மையில் ஜனாதிபதி கோட்டாபாய ஊடக ஆசிரியர்களின் ஊடான சந்திப்பின் போது ஊடகங்களின் கடமைக்கும், சுதந்திரமான செயற்பாடுகளுக்கும் இடையூறாக எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்க மாட்டோம் என உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.