மஹிந்த – கோட்டா இடையில் முரண்பாடு; பாதுகாப்பு அமைச்சு அந்தரத்தில்..!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகவா? அவரிடம் பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை கையளிக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டிய பாதுகாப்பு அமைச்சர் இதுவரை நியமிக்கப்படாத நிலையில், எவ்வாறு பாதுகாப்பு அமைச்சிற்கு செயலாளர் நியமிக்கப்பட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வினவியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம் பெற்ற கட்டட நிர்மாணம் தொடர்பிலான திருத்த சட்ட மூலம் தொடர்பிலான விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக்கொள்ள முடியாது. ஆகவே நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒருவர் இருக்கின்றார். எனினும் அமைச்சர் ஒருவர் இல்லை. அவ்வாறு இருக்க முடியாதல்லவா? பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு ஏன் அந்த அமைச்சு வழங்கப்படவில்லை.

யுத்தத்தின் போது அவர் பாதுகாப்பு அமைச்சை தம் வசம் வைத்திருந்தார். எனினும் இன்று ஏன் வழங்கப்படவில்லை. அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஏதாவது பிரச்சினையா என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அந்த நேரத்தில் அண்ணன் பாதுகாப்பு அமைச்சர். தம்பி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எனினும் ஜனாதிபதியாக தம்பி இருக்கையில், பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லை.

இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கின்றார் எனினும் அவர் அமைச்சரவைக்கு பொறுப்புக்கூற முடியாது. ஆகவே பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசம் காணப்படுமாயின் அதனை வர்த்தமானியில் வெளியிட வேண்டும். வர்த்தமானி ஒன்று வெளியாகாமல் அமைச்சரவையை செயற்படுத்த முடியாது.

இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்புக் கூறுவது யார்? அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இன்றி செயலாளரை நியமிக்க முடியாது.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத் தரப்பு பதில் ஒன்றை வழங்க வேண்டும். 19ஆவது திருத்திற்கு அமைய அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கப்பட வேண்டும். எனினும் இது இடம் பெறவில்லை என்பதை நாம் நன்கு அறிவோம்.

அவ்வாறெனினும் அண்ணன் மீது தம்பிக்கு நம்பிக்கையில்லையா? என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றோம். அவ்வாறு பிரச்சினையெனின் அந்த அமைச்சை வேறு எவருக்காவது வழங்கியிருக்க முடியும்.

அவ்வாறு பிரச்சினை இல்லையெனின் அமைச்சை ஏன் இதுவரை வழங்கவில்லை. அதனை நாம் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை கோட்டபாய ராஜபக்ஷ பதவியேற்றது முதல் பிரதமர் மகிந்த, சகோதரர் பசில், சமல் மற்றும் பெறாமகன் நாமல் உள்ளிட்டோரின் குரல்களைக் காண முடியவில்லை.

அத்துடன் தான் பட்ட துன்ப நிலையை கோட்டா அடைந்துள்ளதாக மைத்ரி அண்மையில் ஊடகங்களுக்கு கூறியதும் நோக்கத்தக்கது.