தமிழர் இரண்டாம் தரப் பிரஜைகளே; காவடி தூக்கிய தமிழரே கேளீர்..!

0

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் சிங்கள மொழிக்குத்தான் முதலிடம் வழங்க முடியும் என்றும் எந்த காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதையும் மீறித் தமிழுக்கு முதலிடம் வழங்க சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழி பெயர் பலகையைத் திறந்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்தப் பலகையில் முதலில் இருந்த தமிழ் மொழி எழுத்துக்களை மாற்றி முதலில் சிங்களத்தில் எழுதப்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

இதனையடுத்து பெயர்ப்பலகை மாற்றப்பட்டு, சிங்களத்தில் முதலில் எழுதப்பட்ட மும்மொழிப் பெயர்ப் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்ற நினைப்பை தமிழ் மக்கள் மறக்க வேண்டும் என்றும், வடக்கு, கிழக்கு உள்ளடங்கிய இந்த இலங்கை நாடு சிங்கள பௌத்த நாடு எனவும் இங்கு சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் தான் முதலிடம் வழங்க முடியும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் சிங்கள மொழியே முதலிடத்தில் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர்கள் நாட்டின் பெரும்பான்மை இனம் என்பதை தமிழர்கள் ஒத்துக் கொண்டுள்ள நிலையில் தமிழ் மொழிக்கு எப்படி முதலிடம் வழங்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தக் காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது என்றும் அதையும் மீறி தமிழுக்கு முதலிடம் வழங்க சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர் எனவும் அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளினால் தான் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகவும், ராஜபக்ச ஆட்சியில் சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் தான் முதலிடம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதற்காக தமிழர்களை நாம் புறக்கணிக்கின்றோம் என எவரும் கருதக் கூடாது என்றும், அவர்கள் இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகள் என்றும் அவர்களையும் அரவணைத்து கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுப்போம் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மொட்டுக்கு காவடி தூக்கிய, தூக்கும் தமிழரே உங்களின் நிலைப்பாடு என்ன?

மாகாண சுயாட்சி பற்றி கதைத்தபடி மொட்டின் காம்புகளாய் வலம் வரும் அபிவிருத்திக்கான தலைவர்களே; இது தொடர்பில் எடுக்கப் போகும் ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன?