விந்தகன் வெளியே சுரேன் உள்ளே; டெலோவினுள் மீண்டும் பிளவு..!

0

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அறிவிப்புக்கள் விடுக்கப்படாத நிலையில் ரெலோ இயக்கத்தின் யாழ் மாவட்ட வேட்பாளராக அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரெலோவின் தலைமைக் குழு, அரசியல் குழு நேற்று வவுனியாவில் கூடிய போது, யாழ் மாவட்ட வேட்பாளர் விவகாரத்தை யாழ் கிளையை கூட்டி அறிவிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சுரேன்தான் தமது யாழ் வேட்பாளர் என்பதை சில வாரங்களின் முன்னரே, தமிழ் அரசு கட்சிக்கு செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்து விட்டார்.

இதேவேளை, கட்சியின் நீண்டநாள் செயற்பாட்டாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணத்தை தவிர்த்து, சுரேந்திரன் குருசாமி அறிவிக்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே எமது யாழ் மாவட்ட வேட்பாளராக சுரேன் களமிறங்குவார். அதேநேரம், விந்தனை நாம் மறக்கவில்லை. அவருக்கு நாம் முக்கிய கடமையொன்றை வழங்கவுள்ளோம். அடுத்த மாகாணசபையில் அவரை அமைச்சராக்கவுள்ளோம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

எனினும் இதனை மறுதலித்துள்ள விந்தன் கனகரட்ணம் இன்றிலிருந்து கட்சியின் பொதுக்குழு, மத்தியகுழு, தலைமைக்குழு, அரசியல் குழு ஆகியவற்றில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். எனினும், கட்சியை விட்டு விலகப் போவதில்லையென்றும், இப்படியான குழுக்கள் இருந்தும் பலனில்லை, இனி அவற்றிற்கு என்னை அழைக்க வேண்டாம் என தெரிவித்து வெளியேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொறியின் அதிர்வுகள் தொடரும்..!