பயங்கரவாதி சர்கானின் சகோதரனின் மனைவி சாரா இன்னும் உயிருடன்???

0

முஸ்லீம் பயங்கரவாதிகளின் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுப் பரிசோதனை அறிக்கை(DNA) அவரது குடும்ப உறுப்பினர்களின் மரபணுவுடன் ஒத்துப் போகவில்லை என மன்றில் விசேட குற்றவியல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற விசாரணையின் போதே அவர் இவ் விடயத்தை சுட்டிக் காட்டினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை இரண்டு கட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, 6 சந்தேக நபர்களுக்கான விசாரணையின்போது மன்றில் தோன்றிய விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம் பெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மரபணு பரிசோதனை தொடர்பாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதன் போது குறித்த தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணு பரிசோதனையுடனும் ஒத்துப் போகவில்லை என்பதை நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனை அடுத்து நீதிவான் மேற்படி சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்ததுடன் குறித்த மரபணு பரிசோதனை தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

மேலும், சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.