தானும் பெளத்த இனவாதிதான் என்பதை மீள உறுதிப்படுத்திய விமல் வீரவன்ச..!

0

மன்னார் மாவட்டத்தின் தலை மன்னார் பிரதேசத்தின் செல்வாரி என்ற இடத்தில் கடந்த 18 ஆம் திகதி பனை அபிவிருத்தி சபையின் தும்பு உற்பத்தி நிலையம் சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெயர் பலகையில் தமிழுக்கு முதலிடமும் சிங்களத்துக்கு இரண்டாமிடமும் வழங்கப்பட்டிருந்தது. குறித்த திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களை விமல் வீரவன்ச தனது முகப்பு புத்தகத்தில் பதிவேற்றி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து சிங்கள இனவாதிகள் அமைச்சரின் முகநூல் பக்கத்தில் தொடர்ந்தும் இனவாத கருத்துக்களை பகிர்ந்ததோடு தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புக்களையும் தெரிவித்து இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின் பேரில் இன்று காலை குறித்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டு பின் மாலையில் சிங்கள மொழி முதல் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை நாட்டப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலப் பகுதியில் வடக்கு கிழக்கில் மேற்காள்ளப்பட்ட நிர்மாணப் பணிகளின் போது அமைக்கப்படும் பெயர்பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து அப்போதைய ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருந்தது.

அதிலும் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறப்பின் போது தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட்டமை தொடர்பில் இப்போதைய இனவாத அமைச்சரான விமல் வீரவன்ச கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விடயங்களிலும் அரசாங்க செலவுகளை மட்டுப்படுத்துவதாக காட்டிக் கொள்ளும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இப்போது இரண்டு பெயர்ப் பலகைகள் நாட்டி மக்கள் பணத்தை வீணடித்துள்ளமை குறித்து என்ன சொல்லப் போகிறார்?

வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் சமூகங்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தமிழுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு? அரசியலமைப்பையே மீறுகின்ற ஒரு அரசாங்கம் ஆளும் ஒரு நாட்டில் வாழ தமிழ் பேசும் மக்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிங்களத்துக்கு முதலிடம் கொடுத்து மாற்றப்பட்ட பெயர்ப் பலகை படங்கள் கடந்த 3 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அமைச்சரின் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.