திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்தால் இலங்கையில் கழுத்துப் போகும்..!

0

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தான் திருடர்களை பிடிக்க முயன்றதாகவும் திருடர்கள் இணைந்த தன்னை சிறையில் அடைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்காக சிறைச்சாலைக் காவலர்களால் அழைத்து வரப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கடந்த 04ம் திகதி முதல் முறையாக ரஞ்சன் ராமநாயக்கவில் மாதிவெல எம்பி உத்தியோக பூர்வ இல்லத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சோதனை நடாத்தப்பட்டது. அதன் போது அவரது உத்தியோகபூர்வ ஆயுதத்தின் அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்தமை தெரிய வந்தது.

அதன் பிரகாரம் அவரை கைது செய்த கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் சட்ட விரோத ஆயுதம் ஒன்றை வைத்திருந்த குற்றத்திற்காக நீதிமன்றில் ஆஜர் படுத்தினர். அதன் போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

பின்னர் அவரது சர்ச்சைக்குரிய சில குரல்பதிவுகள் வெளியானது. அவை தொடர்பில் கைது செய்து விசாரணை செய்யுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியது. அதன் பிரகாரம் கடந்த 14ம் திகதி கைது செய்யப்பட்ட அவர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த வழக்கிற்காக மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளதுடன், திருட்டுக்கு எதிராக குரல் கொடுத்தல் இலங்கையில் கழுத்து போகும் செயல் என்றும் கூறியுள்ளார்.