தமிழரின் விடுதலை மூச்சு ஒரு போதும் அடங்காது – சிவமோகன் எம்பி

0

தமிழன் என்று ஒரு சொல் இருக்கும் வரை அவர்களின் விடுதலை மூச்சு ஒரு போதும் அடங்கி விடாது. தீர்வு கிடைக்கும்வரை நாம் ஓயாது போராடுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்குத் தீர்வு முக்கியமில்லை. சோறுதான் முக்கியம் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உங்களது சோறு எங்களது இரத்தத்தில் சேராது. நீண்ட கால இனமுறுகல் 30 வருட ஆயுதப் போராட்டத்தைச் சந்தித்திருந்தது. இந்தப் போராட்டத்தில் பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அநியாயமாக பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினரையும் சிங்கள தேசம் பலி கொடுத்திருந்தது என்பது வெளிப்படையான உண்மை.

இவ்வளவு பெரிய ஆயுதப் போராட்டத்தின் பின்னும் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன என்பதை சிங்களப் பேரினவாதம் உணர்ந்து கொள்ளத் தயாராக இல்லை என்பது தெரிய வருகின்றது.

மீள்நிகழாமை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய இந்த அரசு மீண்டும் மீண்டும் இனமுறுகலை வளர்த்து விட்டுக் கொண்டிருக்கின்றது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தமிழர்களுக்குச் சோறுதான் முக்கியம், தீர்வு அவசியமில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.

நீங்கள் தரும் சோறு எப்போழுதும் எங்கள் இரத்தத்தில் ஊறாது. தமிழன் என்று ஒரு சொல் இருக்கும் வரை அவர்களின் விடுதலை மூச்சு ஒரு போதும் அடங்கி விடாது, தீர்வு கிடைக்கும் வரை நாம் ஓயாது போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.