கூட்டமைப்புடன் இணைந்து கோட்டாவிற்கு கடிவாளமிடும் முயற்சியில் பிரிட்டன்..!

0

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமாக விலகினால் எவ்வாறான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பிரித்தானியா பிரதமரின் விசேட பிரதிநிதி ஜரத் பெய்லி ஆராய்ந்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் இது தொடர்பில் கலந்துரையாடல் நடத்தவுள்ளதாகவும், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் பங்கேற்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரித்தானிய பிரதமரின் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான விசேட பிரதிநிதியும், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் தெற்காசியாவுக்கான பணிப்பாளருமான ஜரத் பெய்லி கொழும்புக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்று முன்தினம் காலை 9.30 மணியிலிருந்து 10.30 மணி வரையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் அவர் சந்திப்பு நடத்தினார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா விலகிய பின்னர், பிரித்தானியா தலைமையிலேயே இலங்கை தொடர்பான தீர்மானம் முன் வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு மாற்றுக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. அந்தத் தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை என்றும் அதிலிருந்து விலகப் போவதாகவும் கூறி வருகின்றது. இந்த நிலையிலேயே இது தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதி கூட்டமைப்புடன் ஆராய்ந்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் மூன்று தீர்மானங்கள் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டன. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அரசும் இணங்கி, இணை அனுசரணை வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கை அரசு இதிலிருந்து விலக இடமளிக்கப்படக் கூடாது. இனியும் கால அவகாசம் வழங்காமல் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று பிரித்தானிய பிரதிநிதிக்கு எடுத்துரைத்தாகக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அரசு இந்தத் தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தெரிவித்தால், அடுத்து எத்தகைய எதிர் நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பில் நேற்றைய சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அவர் கேட்டறிந்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு இடம்பெறும் காலம், இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் காலம் என்பதால், அங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை முன்னிறுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்பதால், அதனையும் கவனத்தில் எடுத்து மாற்று நடவடிக்கைகளை எவ்வாறு முன்நகர்த்துவது என்று ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த மாத ஆரம்பத்தில் பிரிட்டனில், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் முக்கிய உறுப்பு நாடுகளுடன் பிரித்தானியா இலங்கை விவகாரம் தொடர்பில் ஆராயவுள்ளது. அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பிரித்தானிய பிரதமரின் பிரதிநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.