2020 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கையர்..!

0

ஜப்பானின் டோக்கியோவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து பங்குபற்றும் முதல் வீரர் என்ற பெருமையை குதிரைச் சவாரி வீராங்கனை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுள்ளார்.

சொப்பின் வீஏ என்ற பெயரைக் கொண்ட 10 வயதுடைய குதிரையில் சவாரி செய்தே அவர் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும். டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க 50 நாடுகளைச் சேர்ந்த 200 குதிரைச் சவாரி வீரர்களுக்கு சர்வதேச குதிரைச் சவாரி சம்மேளனம் மற்றும் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது.

இதில் 15 பேர் மாத்திரம் எந்தவொரு அணிக்காகவும் போட்டியிடாத தனிநபர் வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் எப்.ஆர்.ஐ எனப்படும் ஒலிம்பிக் தரவரிசைப் பட்டியல் படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, மத்திய ஆசிய வலய மற்றும் ஆசிய ஓஷியானா வலய நாடுகளில் இருந்து 2 வீராங்கனைகளுக்கு மாத்திரம் வாய்ப்பு கிடைத்தது. இதில் சீனா தாய்ப்பே வீராங்கனை ஜெஸ்மின் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, 2ஆவது இடத்தை மெட்டில்டா கார்ல்சன் பெற்றுக் கொண்டார். இதன்படி, மெட்டில்டா கார்ல்சன் இம்முறை ஒலிம்பிக்கில் இசையுடனான குதிரைச் சவாரி போட்டிப் பிரிவில் களமிறங்கவுள்ளார்.

2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக இதுவரை இலங்கையிலிருந்து எந்தவொரு வீரரும் தகுதியினைப் பெற்றுக் கொள்ளாத நிலையில், மெட்டில்டா கார்ல்சனின் பங்குபற்றலானது இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.