குரல் பதிவுகளை பல நோக்கங்களுக்கு பயன்படுத்துவது குற்றம் – பந்துல

0

தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குற்றம் எனவும் இது ஊடகங்களுக்கும் பொருந்தும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தகவல் தொடர்பு துறை சார்ந்த இந்த சம்பவத்தின் சட்ட நிலைமை குறித்து தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து பொலிஸார் கைப்பற்றிய குரல் பதிவுகள் வேறு தரப்பினரின் கைகளுக்கு செல்லவில்லை என்பது உறுதியானது.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட குரல் பதிவுகளுக்கு மேலதிகமானவை ஏதோ ஒரு தரப்பு வெளியிட்டு வருகிறது. பல குரல் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன் பல தரப்பினரிடம் அவை இருக்கின்றன.

வேறு தரப்பினர் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் போது அவற்றை அறிவிக்காமல் பதிவு செய்வது, வெளியிடுவது சட்டப்படி குற்றம் என நம்புகிறேன்.

இந்த குரல் பதிவுகள் சம்பந்தமாக அரசாங்கம் உத்தியோக பூர்வமான நிலையை எடுப்பது கூட சிரமம். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இப்படியான அனுபவம் கிடைத்துள்ளமையே இதற்கு காரணம் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த காலத்தில் கூட்டமைப்பின் சிவமோகன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன் போன்றவர்களின் தொலைபேசி உரையாடல்கள் வெளிவந்த போது வேடிக்கை பார்த்தவர்கள், இன்று ரஞ்சன் ராமநாயக்க ஊடாக நீதிமன்றின் சுயாதீனம் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறான சட்டம் தொடர்பில் குரல் எழுப்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.