தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும்..!

0

தேசிய பாதுகாப்பு என்கின்ற போர்வையில் தமிழ் மக்களுடைய பிரதேசங்களில் அதிகளவான இராணுவங்களை குவித்து அதிக அளவான சோதனைச் சாவடிகள் அமைத்து தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான விடையங்கள் தமிழ் மக்களையும் இருக்கக் கூடிய அரசாங்கத்திற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியினை மேலும் மேலும் வலுப்படுத்தும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் உயர் பீட உறுப்பினரும் மன்னார் நகர சபை உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை மதியம்(10) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியை பொறுத்த வகையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் சுமார் 15 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நாங்கள் அந்த கூட்டமைப்பில் இருந்து மக்களுக்கான பணிகளை முன்னெடுத்த ஒரு அமைப்பு.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்ய முடியாத சூழல் நீடித்து வந்தது.உள்ளே இருந்து கொண்டு நாங்கள் ஜனநாயக ரீதியாக போராட்டங்களை முன்னெடுத்தோம்.

அதனை ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாற்ற முடியாமல் போனது.தமிழரசுக் கட்சி இடம் கொடுக்காத காரணத்தினால் தொடர்ச்சியாக அந்த கூட்டமைப்பில் இருந்து நாங்கள் உட்பட பல்வேறு கட்சிகள் வெளியேற வேண்டிய சந்தர்ப்பங்கள் கட்சிகளாகவும்,தனி நபர்களாகவும் அக்கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர்.

தொடர்ச்சியாக நாங்கள் மீண்டும் தமிழ் மக்களின் அடையாளம், இருப்பு, தமிழ் மக்கள் பிரச்சினைகளில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடை நடுவில் அதன் கொள்கை கோட்பாடுகளை இழந்து தேர்தல் விஞ்ஞாபனங்களை மறுதளித்து அரசிற்கு முன்டு கொடுக்கும் ஒரு சக்தியாக தன்னை காட்டிக் கொண்டதன் அடிப்படையில் அதில் இருந்து வெளியேறி தொடர்ச்சியாக நாங்கள் மீண்டும் ஒரு மாற்றுத் தலைமை அவசியம் என்கின்ற அடிப்படையில் நாங்கள் மாத்திரம் அல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியவர்கள் இப்போது புதிதாகவும் சில கட்சிகளை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அவர்களும் ஏனைய கூட்டமைப்பில் இருந்து விலகிய தனி நபர்களும் இணைந்து ஒரு மாற்றுத்தலைமையை நாங்கள் இன்று முன் நகர்த்திக் கொண்டு இருக்கின்றோம்.

இதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக நான் நம்புகின்றேன். அந்த மாற்று அணிக்கு முன்னால் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்க இருக்கின்றார்.

எதிர் வரும் தைப்பொங்கள் தினத்திற்கு பிற்பாடு அந்த மாற்று அணியின் பெயர்,மாற்று அணி எவ்வாறு செயற்பட உள்ளது என்பது தொடர்பான மாற்று அணியின் கொள்கைத் திட்டங்கள் தொடர்பான விடையங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கின்றோம்.

எனவே வர இருக்கின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் சரி பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளுராட்சி தேர்தல் போன்ற தேர்தல்களுக்கு மாற்று அணி வட கிழக்கு மாகாணங்களில் களமிறங்கி போட்டியிட்டு தமது பிரதி நிதித்துவத்தை ஏற்படுத்தும்.

மாற்று அணியில் விக்னேஸ்வரன் தலைமையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி,ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி மற்றும் ஏனைய அமைப்புக்களும் இணைந்து இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதனடிப்படையில் வடக்கு,கிழக்கில் இந்தக்கட்சி களம் இறங்கி வெற்றி பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. வடக்கு, கிழக்கில் இன்று இருக்கின்ற நிலமைகள் வேறு.

இங்கு ஒரு சில ஆசனங்களைத் தவிர ஏனைய ஆசனங்களை தமிழர்களே பிரதி நிதித்துவப்படுத்துகின்ற சூழல் இருப்பதினால் இங்கே நாங்கள் பிறிந்து நின்றாலும் ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

வடக்கு கிழக்கில் நாங்கள் பிறிந்து நின்றாலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கே என்பதனை புறிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு வித்தியாசமான பார்வையை நாம் செலுத்த வேண்டும். கிழக்கில் தமிழர்கள் பிரிந்து நின்றால் அந்த பிரதிநிதித்துவம் சிங்களவர்களுக்கோ அல்லது ஏனையவர்களுக்கோ செல்லக் கூடிய நிலை இருப்பதினால் அங்கே எவ்வாறு போட்டியிடுவது அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது எங்களது மாற்று அணி இணைந்து எப்படி அந்த பிரதி நிதித்துவங்களை காப்பாற்றிக் கொள்ளுவது என்பதற்கான ஒரு தேர்தல் கூட்டாக அதற்கான வியூகங்களையும் நாங்கள் அமைக்க வேண்டி உள்ளது.

ஏன் என்றால் அந்த பிரதி நிதித்துவங்கள் போகக்கூடாது என்பதற்காக. பிரதிநிதித்துவங்களை காப்பாற்றுவதற்காக சில விட்டுக் கொடுப்புகளுக்காக எமது கட்சியும் சரி கூட்டு முன்னனியும் சரி தயாராகவே இருக்கின்றது.

எனவே எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் மக்களின் பிரதி நிதித்துவங்களை அதிகரித்து அரசாங்கத்துடன் பேரம் பேசும் ஒரு சக்தியாக நாங்கள் திகழ வேண்டும் என்பதற்காக அனைத்து தமிழ் மக்களும் மாற்று முன்னனிக்கு வாக்களித்து முன்னனியை பலப்படுத்த வேண்டும்.

மேலும் புதிதாக உறுவாகியுள்ள ஆட்சி என்பது கடந்த காலங்களை விட தற்போதைய ஜனாதிபதியினுடைய செயற்பாடு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்தாலும் குறிப்பாக தமிழ் மக்கள் எப்போதுமே அச்சப்படக் கூடிய ஒரு சூழலே தற்போதும் காணப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு என்கின்ற போர்வையில் தமிழ் மக்களுடைய பிரதேசங்களிலே அதிகளவான இராணுவங்களை குவித்து அதிக அளவான சோதனைச் சாவடிகள் அமைத்து தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான விடையங்கள் தமிழ் மக்களையும் இருக்கக் கூடிய அரசாங்கத்திற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியினை மேலும் மேலும் வலுப்படுத்தும்.

குறித்த சம்பவம் ஒற்றுமையை அல்லது எதிர் காலத்தில் நாங்கள் நாட்டில் சேர்ந்து வாழக் கூடிய சூழலை உறுவாக்காது என்பதனை இந்த அரசு புறிந்து கொண்டு தமிழ் மக்களின் நலன் சார்ந்து சில விடையங்களை கையாளுவதன் ஊடாகவே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

அதன் அடிப்படையில் தற்போது இருக்கக் கூடிய தேசிய பாதுகாப்பு என்கின்ற ரீதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை குறிப்பாக தமிழர் பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும். கரையோர பகுதிகளில் பாதுகாப்பை மேற்கொள்ளுவது நான்றாக இருக்கும்.

நகர பகுதிகளிலும்,மக்கள் நடமாட்ட பகுதிகளிலும் சோதனைச் சாவடிக்ளை அமைப்பது என்பது மக்களை அசௌகரியங்களுக்கு உற்படுத்தி மக்கள் அரசு மேல் மேலும் மேலும் வெறுப்பை ஏற்படுத்தும் செயலாகவே நாங்கள் கருதுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.