வடகிழக்கு தமிழ் மக்களுக்கு சோறுதான் தேவை; தீர்வு முக்கியமல்ல..!

0

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுதான் முக்கியம் என தமிழ்த் தலைமைகள் பொய் கூறுகின்றார்கள் எனவும் உண்மையில் அவர்களுக்குச் சாப்பாடுதான் முக்கியம் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதாவது சோறுதான் மிக மிக முக்கியம். அது கிடைக்காமல் அங்குள்ள மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்ச சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல மூவின மக்களுக்கும் ஜனாதிபதிதான். சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் கோட்டாபய ஜனாதிபதியாவார் என்று அவருக்கும், எங்களுக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே தெரியும்.

ஆனால், தமிழ் மக்களின் வாக்குகளும் தனக்கு வேண்டும் என கோட்டாபய எங்களிடம் சொல்லியிருந்தார். அதற்கான வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தோம். ஆனால், தமிழ் மக்களில் கொஞ்சப் பேர் தான் கோட்டாபயவுக்கு வாக்களித்தார்கள். அதற்காக தமிழ் மக்களை நாம் கவனிக்காமல் இருக்க மாட்டோம்.

வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வுதான் முக்கியம் என்று தமிழ்த் தலைமைகள் கூறுகின்றார்கள். ஆனால், அது பொய். இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் பச்சைப் பொய்தான் கூறி வருகின்றார்கள்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக ரணில் அரசுடன் ஒட்டியிருந்ததால் சம்பந்தனுக்கு வாகனங்களுடன் கொழும்பில் பங்களா கிடைத்தது. சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றித் திரிந்தார்கள்.

தங்களின் பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க வைத்தார்கள். பல வசதிகளுடன் வீடுகளை வாங்கினார்கள். இப்படியான கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் வடக்கு, கிழக்கு மக்களுக்கு – தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுதான் முக்கியம் என்று பொய் உரைக்கின்றார்கள். உண்மையில் தமிழ் மக்களுக்கு சோறுதான் மிக மிக முக்கியம்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கி நின்றேன். அங்குள்ள பல பகுதிகளைப் போய் பார்த்தேன். அங்கு தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, ஒழுங்கான வீதிகள் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை. பொருளாதார வசதி இல்லாததால் அங்குள்ள மக்கள் சாப்பிடக் கஷ்டப் படுகின்றார்கள்.

நாம் ஜனாதிபதி கோட்டாபயவுடன் இம்மாதம் வடக்குக்குச் செல்லவுள்ளோம். அங்குள்ள உண்மை நிலவரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசுவோம்.

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை – பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வழிகளைச் செய்யவுள்ளோம். அங்கு தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளோம்.

வடக்கிலுள்ள வீதிகளைப் புனரமைப்போம். அங்குள்ள மக்களுக்கு மின்சாரத்தைக் கொடுப்போம். தண்ணீர் கொடுப்போம். சகல அபிவிருத்திகளையும் செய்வோம். சிங்கள மக்கள் வாக்களித்தமைக்காக தமிழ் மக்களுக்கு நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது.

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற மாட்டோம். இராணுவம் முகாம் அதிகமாக இருக்கும் காணிகளை மட்டும் அகற்றி அந்தக் காணிகளை உரிய மக்களிடம் மீளக் கையளிப்போம்.

சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர் என்னுடன் தொலைபேசியில் பேசினார். “கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் நாம் உயிருடன் இருக்க மாட்டோம் எனப் பயந்தோம். ஆனால், அவர் நல்ல மனிதர் போல் இருக்கின்றார்.

அவரின் செயல்களை இப்போது வெளிப் படையாகப் பார்க்கும் போது புரிகின்றது. எனவே, அடுத்த தடவை அவருக்கு நாம் ஆதரவு வழங்குவோம் என்று அந்த நபர் என்னிடம் கூறியிருந்தார்.

கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களை அடிப்பார், துன்புறுத்துவார் என்று தேர்தல் காலத்தில் தமிழ்க் கட்சிகள் பொய்தான் சொன்னார்கள். அந்தக் கட்சிகளின் பொய்களை இனிமேல் எவரும் நம்பக் கூடாது.

நாம் அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தரப்புடன் பேசுவோம். ஆனால், சமஷ்டியைக் கொடுக்க மாட்டோம். அதற்காக மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவே மக்கள் வாக்களித்தார்கள்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்திலிருந்து நாம் பேச்சுக்களை ஆரம்பிப்போம். அதில் மூவின மக்களும் நன்மையடையும் பரிந்துரைகளை மட்டும் நடைமுறைப்படுத்துவோம். அதற்கு மேல் எம்மால் செல்ல முடியாது. மூவின மக்களும் நன்மையடையும் வகையில்தான் தீர்வை எம்மால் வழங்க முடியும்.

நாம் புதிய அரசு. நாம் பதவிக்கு வந்து இப்போது இரண்டு மாதங்கள்தான் நிறைவடைகின்றன. மார்ச் மாதம் ஜெனிவாவில் ஜ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் நடைபெறும் போது எமது அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள்தான் நிறைவடையும்.

அதேவேளை, மார்ச்சில் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. எனவே, ஐ.நா. தீர்மான விவகாரம் தொடர்பில் பெப்ரவரி மாதத்துக்கிடையில் எம்மால் எதுவும் செய்ய முடியாது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜெனிவாவுடன் நாம் பேச கால அவகாசம் கேட்கவுள்ளோம். எனினும், இது தொடர்பில் ஜனாதிபதிதான் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் பேசி இறுதி முடிவெடுப்பார்.

போரின் போது இரு தரப்பிலும் இழப்புக்கள் மற்றும் குற்றங்கள் இடம் பெற்றன. இந்த விவகாரம் நமது நாட்டுப் பிரச்சினை. எனவே, போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனிவாவில் பேசத் தேவையில்லை. இங்கு தமிழ் மக்களுடன் பேசுவோம். ஓர் இணக்கத்துக்கு வருவோம்.

தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் பாடுவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவை அரசு எடுக்கவில்லை. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் சிங்கள மொழியில் மட்டும்தான் தேசிய கீதம் பாடப்பட்டது.

ஆனால், 2015ஆம் ஆண்டுப் பின்னர்தான் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வருகின்றது. எனவே, இரண்டு மொழிகளிலும் தேசிய கீதத்தைப் பாடலாமா அல்லது சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதத்தைப் பாடலாமா என்று அரசு இனித்தான் இறுதி முடிவை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்