வவுனியாவில் சிறுமி வன்புணர்வு; இளைஞரை தேடி பொலிஸார் வலைவீச்சு..!

0

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியொருவரை கடந்த பல மாதங்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடி வருவதுடன், இதற்கு உதவிய குற்றச்சாட்டில் உறவினரான மற்றுமொரு இளைஞர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரிய புளியங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜுலை மாதத்தில் இருந்து உறவினர் ஒருவரின் துணையுடன் இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்த போது, அவர் தனக்கு நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரால் ஓமந்தை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வன்புணர்வுக்கு உதவிய குற்றச்சாட்டில் உறவினரான 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேக நபரான 29 வயது இளைஞனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சிறுமி கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.