இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழரே; உலகத் தமிழர் முன் விக்கி..!

0

ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா ஒன்று கூடல் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் 2020 ஜனவரி மாதம் 11இ 12ம் திகதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு விருந்தினர் உரை

தலைவர் அவர்களே, தலைமை விருந்தினர் அவர்களே, எனதருமை உலகத் தமிழ் உறவுகளே!

உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடும் இந்த உலகத் தமிழர் திருநாள் விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகம் பூராகவும் பரந்து கிடக்கும் தமிழ் உறவுகள் இவ்வாறு வருடா வருடம் கூடுவது வரவேற்கத்தக்கது.

ஒவ்வோர் நாடுகளில் இருந்தும் வந்து தமது தனித்துவமான தற்போதைய பிரச்சினைகளை எமது உறவுகள் இங்கு வெளியிடவும், எமது தமிழ் இனத்தின் பாரம்பரிய ஒன்றித்த கலை, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை இங்கு அரங்கேற்றவும், உலகெலாம் பரவிக் கிடக்கும் எமது உறவுகளின் வருங்கால வாழ்வு மேம்பாட்டுக்காக இங்கு வந்து கருத்துப் பரிமாறி உரிய நடவடிக்கைகளை எடுக்கவும், நாம் யாவரும் பெருமை மிக்க தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை எமக்குள் நாம் புரிந்து கொள்ளவும் இவ்வாறான விழாக்கள் பெரிதும் உதவுகின்றன.

உலகத் தமிழ் வம்வாசளி அமைப்பின் தலைவரும் இவ்விழாவின் அச்சாணியுமான திரு.ஜெ.செல்வகுமார் அவர்களுக்கு எமது பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகட்டும்.

தற்போது ஒரு புதிய அரசியல்ப் பிரமுகர் இலங்கையில் ஜனாதிபதியாக பரிணமித்துள்ளார். அவரின் தற்போதைய அரசியல் போக்கு இலங்கைத் தமிழ் மக்களின் வருங்கால மேம்பட்ட நல்வாழ்வுக்கு எந்தளவுக்கு சாதக பாதகமாக அமையக் கூடும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் எமது பிரச்சினை பற்றி மிகச் சுருக்கமாக ஒரு சில வார்த்தைகள் கூறுவது எமக்கும் உதவும், நீங்களும் தெரிந்து வைத்திருந்தால் எங்கள் சார்பில் உங்களுக்கும் உதவும் என்று நம்புகின்றேன்.

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழரே. அதில் எந்தவித மயக்கமும் இருக்கத் தேவையில்லை. எமது ஆதிக்குடிகள் நாகர்களாகவூம் இயக்கர்களாகவும் இருந்தார்கள். நாகர்கள் நாக வழிபாட்டில் ஈடுபட்டதால் நாகர்கள் எனப்பட்டனர். இயக்கர்கள் இயற்கையை ஆவிகளாகவும் தேவதைகளாகவும் வழிபாட்டார்கள். வேடர்கள் எனப்படுபவர்கள் ஆதித் திராவிடர்கள். இலங்கையில் நெடுங்காலமாக இருந்து வந்தவர்கள். சிங்களவர்கள் எனக் கூறப்படுபவர்களும் ஆதித் திராவிடக் குடிகளில் இருந்து வந்தவர்களே. அண்மைய DNA பரீட்சைகள் அவர்களைத் திராவிடர்கள் என்றே குறிப்பிடுகின்றன.

தமிழ்ப் பேசியோரும் அதே திராவிட வம்சத்தவர்களே எனப்படுகின்றது. மேலும் சிங்களமொழி கி.பி.6ம் 7ம் நூற்றாண்டுகளில் தான் வழக்கிற்கு வந்தது. அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுபவர்கள் இருக்கவில்லை. அப்படியிருக்க சிங்கள அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் கடந்த 100 வருடங்களில் பிழையான ஒரு கருத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

ஆரியர்களாள சிங்களவரே இலங்கையின் ஆதிக்குடிகள் என்றும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சோழர் காலத்து வந்தேறுகுடிகளே தமிழர்கள் என்றும் கூறி வருகின்றார்கள். இதனைக் கேள்விக்குட்படுத்த எமது தமிழ் சரித்திரப் பேராசிரியர்கள் ஏதோ காரணங்களுக்காக இதுவரையில் முன் வரவில்லை.

தேவதூதர்கள் அடிவைக்க மறுக்கும் இடங்களுள் உள்நுழைய முட்டாள்கள் முன் வருவார்கள் என்றது போல் நான் இவற்றைக் கேள்விக்கு உட்படுத்தி சிங்கள புத்திஜீவிகளைச் சிந்திக்கச் செய்து கொண்டிருக்கின்றேன். ஓரளவு சிங்கள புத்திஜீவிகளை உசுப்பேத்தி வருகின்றேன்.

அண்மைய ஆதிகால சாட்சியங்களின் படி 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது புத்தர் காலத்திற்கு முன்னதாகவே தமிழரின் நாகரிகம் இலங்கையில் பரவி இருந்ததற்கான ஆதாரங்கள் வெளி வந்துள்ளன. இதுபற்றி அண்மையில் எமது சிரேஷ்ட சரித்திரப் பேராசிரியரும் யாழ் பல்கலைக் கழக வேந்தருமான பேராசிரியர் பத்மநாதன் அவர்களுடன் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடி இருந்தேன்.

இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கையானது சிங்கள பௌத்த மக்களின் நாடு என்றும், தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வந்தேறு குடிகள் என்றும் அவர்களுக்கென்று எந்த உரிமைகளும் தரத் தேவையில்லை என்ற கருத்தை இலங்கை சுதந்திரம் அடைந்த காலந் தொடக்கம் அப்பாவி சிங்கள மக்கள் மனதில் சிங்கள அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் விதைத்து வந்துள்ளனர்.

இதனை மனதில் ஏற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று கூறுவதில் உறுதியாகவுள்ளார். ஒருவேளை விரைவில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற அவர் அவ்வாறு கூறி வருகின்றாரோ என நாம் அறியோம்.

இவ்வாறான ஒரு எண்ணத்திலேயே நாட்டை ஆள்பவர் இருக்கின்றார் என்ற செய்தி பெரும்பான்மை சிங்கள மக்களையும் முக்கியமாக பௌத்த பிக்குகளையும் மன மகிழ்வடையச் செய்துள்ளது. மீண்டும் ஒரு கலவரம் 1958இ, 1977 மேலும், 1983ல் வந்தது போல் இனியும் வருமோ என்ற பயத்தில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.

சென்ற ஏப்ரல் 21 ம் திகதியன்று தடம்புரண்ட சில இஸ்லாமியர்களால் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல்கள் இஸ்லாமிய சகோதரர்களையும் மனக்கிலேசத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே இலங்கையில் தமிழ்ப் பேசும் இனம் இன்று மிக மோசமான ஒரு சூழலை எதிர் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இராணுவ நிலைகளை அதிகரித்தல், அவற்றைச் சுற்றி பௌத்த விகாரைகளையும், சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட எமது வழிபாட்டுத் தலங்கள், மற்றும் பண்பாட்டு மையங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகள் வன பரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கடல் நீரியல் திணைக்களம், கனிமவியல் திணைக்களம், கமத்தொழில் திணைக்களம், உல்லாசப் பயணத் துறை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சா்வதேச சமூகம் வெளிப் பார்வையில் கண்டு கொள்ள முடியாத நுட்பமான இவ்வாறான வழிமுறைகளைக் கையாண்டு எமது வாழ்வியல், பொருளாதார, பண்பாட்டு அடையாளங்களை சிதைத்து வருவதுடன் தமிழ் மக்களின் வளங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது. கட்டமைக்கப்பட்ட சிங்களப் பேரினவாதத்தினால் கன்னியாவில், தென்னமரவாடியில், பழைய செம்மலையில், வெடுக்குநாறி மலையில், நாவற்குழியில் என தமிழர் நிலமெங்கும் தீவிரப்படுத்தப்படும் ஆக்கிரமிப்புக்கள் தமிழ் மக்கள் மீதான தொடா்ச்சியான இனவழிப்பு நிகழ்ச்சி நிரலை உறுதி செய்து நிற்கின்றன.

தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கான நீதியையும் அவை மீள நிகழாமைக்கான உறுதிப்பாட்டையும் ; வேண்டி சார்வதேசத்தின் முன்னிலையில் தொடா்ந்தும் போராடி வருகின்றனா். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை தமிழ் மக்களை திருப்திப்படுத்தாத தீர்மானங்களை தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் மத்தியிலும் முன் வைத்து அதனை நடைமுறைப் படுத்தக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகளாக நான்காண்டு கால அவகாசத்தை வழங்கியிருந்தும், அதனைக் கூட கிஞ்சித்தும் மதிக்காத இலங்கை அரசு மாறாக சா்வதேச சமூகத்திற்கே சவால் விடும் வகையில் போர்க் குற்றவாளிகளையே மிக உயா் பதவிகளுக்கு நியமித்து வருகின்றது. இதன் உச்சமாக அண்மையில் நடந்த இராணுவத் தளபதியின் நியமனத்தைக் காணலாம்.

இன்று பல முக்கியமான அரச பதவிகளுக்கு முன்னர் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வருகின்றனர். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவா்கள் என பெயா் குறிப்பிடப்பட்டு ஆதாரங்களோடு இலங்கை இராணுவத்தினா் சர்வதேச நிறுவனங்களினால் குற்றச் சாட்டுகளுக்கு உட்பட்டிருக்கின்ற போதும், இன்று வரை ஒருவா்கூட கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவோ இல்லை என்பதிலிருந்து இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை மீது நாம் நம்பிக்கை கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் தான் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப் படுகொலைக்கு சா்வதேச நீதி விசாரணையை கோரி நிற்கின்றோம். இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பு போர்க்குற்றங்கள் சம்பந்தமாகப் பொறுப்புக் கூறத் தயாரில்லை. எனவே பன்னாட்டு விசாரணையைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இதனைச் சார்வதேச சமூகம் உணா்ந்து கொள்ள வேண்டும். எமது உலகளாவிய உறவுகளான நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்து பத்தாண்டு காலத்தின் பின்னரும் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டம் உள்ளவரை அரசியற் கைதிகளுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு கருவியாகக் கையாண்டு தமிழ் சிவில் எதிர்ப்புக்களை – தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை அரசு அச்சுறுத்தி வருகின்றது. யாழ் பல்கலைக் கழக மாணவா்களின் அண்மைய கைது இவ் வச்சுறுத்தல்களின் ஒரு அலகே. அரசியல் கைதிகள் விவகாரத்தில் எமது மக்கள் தொடா்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா். இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுகிறார்கள் என்பதற்கு போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக காத்திருப்பது வெளிப்படையான எடுத்துக் காட்டாகும்.

சிங்கள இளைஞர்களின் 1971ம் ஆண்டின் ஜே.வி.பி கிளா்ச்சியின் பின்னா் அவா்களுடைய போராளிகள் எதுவித நிபந்தனைகளுக்கும் அப்பால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள். மாறாக தமிழ் இளைஞர்கள் போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் நீதியான விசாரணைகள் ஏதுமின்றி சந்தேகத்தின் பேரில ; தொடா;ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவா்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யப்படும் போதுதான் இலங்கை அரசானது நீதி, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் பற்றிப் பேச முடியும்.

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் போராட்டம் 1000 நாட்களைக் கடந்து விட்டது. அதற்கான தீர்வு எதுவும் கிடைக்கப் பெறவில்லை. பதிலாக அப்போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் நோக்குடன் அரசாங்கம் காணமல் போனார் அலுவலகங்கள் என்னும் போர்வையில் அலுவலகங்களைத் திறந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு மாதம் 6000 ரூபா தருவதாக கூறுகின்றனா்.

காணமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தமது சொந்தங்களுக்காக நீதி கேட்டு மட்டுமே போராடுகின்றார்களே தவிர நிவராணங்களுக்காக அல்ல. குறிப்பாக வட்டுவாகல் மற்றும் ஓமந்தைச் சோதனைச் சாவடிகளில் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோரும், வாழ்க்கைத் துணைகளும், சகோதரரா்களும், உறவினா்களும் இன்றும் கண்கண்ட சாட்சிகளாக இருக்க அவா்களுடைய சாட்சியங்களின் அடிப்படையில் உண்மைகளைக் கண்டறிந்து இப் பிரச்சினைக்கு நீதியான தீர்வினை வழங்குவதற்கு மறுத்து வருகின்ற இலங்கை அரசாங்கம் தற்போது காணாமல் போனோர் அலுவலகங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சா்வதேச சமூகத்தினையும் தொடா்ந்தும் ஏமாற்றி வருகின்றது.

இலங்கை அரசானது இராணுவ மயமாக்கலின் ஊடாக தொடர்ந்தும் தமிழ் மக்களது காணிகளைச் சுவீகரித்து வைத்திருப்பதன் மூலம் உல்லாச விடுதிகள், விவசாயப் பண்ணைகள், இதர வர்த்தக நடவடிக்கைகளைத் தாமே மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதுடன் தொடர்ந்தும் பொதுச் சேவை நிர்வாக விடயங்களிலும் தலையீடு செய்து வருகின்றது.

படைத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவா்களால் எமது பிரதேசக் கடல் வளங்கள் அபகரிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மீனவா்கள் வடகிழக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதுடன், வாடிகளை அமைத்து தமிழ் மீனவா்களது வாழ்வாதாரங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் எமது மீனவா்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தென்னிலங்கை மீனவா்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாக எமது கடல் வளம் சிதைக்கப்படுகின்றது.

வடக்கில் சில துறைமுக அபிவிருத்தி திட்ட முன்னெடுப்புக்கள் தமிழருக்கான அபிவிருத்திகளாக காட்டப் பட்டாலும் அது உண்மையில் தென்னிலங்கை மீனவா்களுக்கான பாதுகாப்பான தரிப்பிடங்களுக்காகவே அமைக்கப்படுகின்றன. அங்கு தென்னிலங்கை மீனவா்களின் அதிக பிரசன்னமும் அவா்களுக்கான படைத்தரப்பினரின் ஒத்துழைப்பும் உள்ளூர் தமிழ் மீனவா்களின் தொழிலைப் பாதிப்பதுடன் தமிழா் தமது சொந்த வாழ் விடங்களிலேயே தாழ்வு நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

இடம்பெயா்ந்த மக்கள் அவா்களது பாராம்பரிய வாழ்விடங்களில் குடியமர முடியாத நிலை இன்னமும் தொடா்கின்றது. அக் காணிகளை கடந்த 10 வருடங்களாக படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள். வடகிழக்கு தமிழா் தாயகப் பகுதிகளிலே தொடா்ந்தும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணையையும், பாதுகாப்பையும் வழங்குவதினூடாக இலங்கை இராணுவம் தமிழா்களின் இருப்பினை மலினப்படுத்துகின்றது.

இந் நிலையிலேயே எம்மக்கள் தாமாகவே பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா். கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம், கிழக்கிலும் வடக்கிலும் முன்னெடுக்கப்படும் காணமால் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், தமிழ் அரசியற் கைதிகள் விடுதலைக்கான போராட்டம், நீராவியடிப் பிள்ளையார் கோவில் போராட்டம், கன்னியா வெந்நீரூற்றுப் போராட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயா்த்துவதற்கான போராட்டம் என தமது அன்றாடக் கோரிக்கைகள் தொடக்கம் அரசியல் விடயங்களையும் முன்வைத்து போராட்டங்களை மக்கள் தொடா்ச்சியாக நடாத்தி வருகின்றனா்.

இவ்வாறு இன்று பொது மக்கள் தலைமையேற்றிருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை மேலும் வலுவாக்கி, இருக்கக் கூடிய சா்வதேச நிலைமைகளையும், சந்தா்ப்பங்களையும் பயன்படுத்தி, சிறீலங்கா அரசின் அப்பட்டமான இனவழிப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பேசவும், அதனை எதிர்க்கவும், தடுக்கவும், போர்க் குற்றங்கள் மற்றும் தமிழ் இனவழிப்பு மீதான சா்வதேச விசாரணையை கொண்டு நடாத்த அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் நாம் மீண்டும் மீண்டும் தேசமாய் திரட்சி பெற வேண்டியுள்ளது.

இனவழிப்பு என்பது ஒரு கடுமையான சொல்லென்று சிலர் கூறுகின்றார்கள். எமது சனத்தொகை கடந்த காலங்களில் வெகுவாகக் குறைந்து கொண்டு போவதை நாம் அவதானித்தால் உண்மை புரியும். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொகை கடந்த 50 வருடங்களில் அரைவாசி ஆகியுள்ளது. மேலும் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு என்பது அவா்களை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அமைந்தாலே ஒழிய எமது பாதுகாப்புக்கு இடமில்லை என்பதை தொடா்ச்சியான வரலாறும் தொடரும் நிலைமைகளும் மீண்டும் மீண்டும் இடித்துரைத்து நிற்கின்றன.

அந்த வகையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வுத் திட்ட முயற்சியும் பிரிக்கப்பட முடியாத வடக்குக் கிழக்குத் தாயகத்தில் தமிழ்த் தேசத்தை உறுதிப்படுத்துவது, அதனுடைய இறைமை அங்கீகரிக்கப்படுவது, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டித் தீர்வை அமைப்பது போன்ற விதத்திலேயே அமைய வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை சா்வதேச சமூகத்திற்கும் எமது வெளிநாட்டு உறவுகளுக்கும் கூறி வைக்கின்றேன்.

நாங்கள் எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகலாம் என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் நாங்கள் எமது தனித்துவத்துடன் பாதுகாப்பாக எம் இன விருத்திக்காக வாழ வேண்டும் என்றால் மேற்கூறிய அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நாங்கள் எமது வருங்காலம் முன்னைய பாகிஸ்தான் போன்று வல்லாட்சியில் அமிழ்ந்து விட்டால் தமிழர்களுக்கு என்ன நடக்கும் என்ற கவலை ஏற்கனவே மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது. நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான தடங்களை தேடவேண்டிய நிலையே ஏற்படப் போகின்றது என்று எண்ண வேண்டியுள்ளது.

பறங்கியருக்கு இது ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது. இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் “தமிழ்” என்ற அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து எமக்காக குரல் கொடுப்பதுடன் உரிய செயற்பாடுகளில் இறங்க வேண்டும். எமது மக்களின் உரிமைகளை உறுதி செய்யவேண்டிய உணர்வு மற்றும் அறம் சார்ந்த தார்ம கடற்பாட்டை நீங்கள் யாவரும் கொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் வேறு நீங்கள் வேறு அல்ல. எமது பிரச்சினையை உங்கள் பிரச்சினையாகக் கருதுங்கள். நீங்கள் எமக்காக செய்யக் கூடியவை என்று எனது மனத்தில் தோன்றும் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

1. எமது உண்மையான வரலாற்றை புகழ் பூத்த பல்கலைக் கழகங்களில் உள்ள வரலாற்று தமிழ் ஆய்வாளர்கள் ஆராய்ந்து எழுத முன்வரவேண்டும். எமது ஆய்வாளர்கள் இதனைச் செய்வதில் பல சவால்களும் பிரச்சினைகளும் இருக்கின்றன. சிங்கள ஆய்வாளர்கள் கூட உண்மையைக் கூறவிழைந்தால் அவர்கள் அவதிகளுக்கு உள்ளாகின்றார்கள்.

2. நாம் போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளோம். எம்மை அப்படியே வைத்திருக்கவே அரசாங்கம் விரும்புகின்றது. அதன் நோக்கம் எமது மக்களை உரிமைப் போராட்டத்திலிருந்து விலக்கி சலுகை அரசியலை நோக்கி நிர்ப்பந்திப்பதாகும். இதனைத் தடுப்பதற்கு உலகெங்கும் பரந்துள்ள தமிழ் வர்த்தகர்கள் எம் பிராந்தியங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும். மீன்பிடி துறையில் முதலீடுகளை இந்திய வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் செய்து எமது மீனவர்களுக்கு படகுகளையும் ஆழ்கடல் மீன்பிடி பயிற்சிகளையும் வழங்குவதன் மூலம் நீங்களும் வளர்வதுடன் எம் மக்களுக்கும் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

இதனைப் போலவே விவசாயத் துறை மற்றும் வணிகத் துறைகளிலும் நீங்கள் முதலீடுகளை எமது வட-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன். குறிப்பாக எமது முன்னாள் போராளிகள் பலர் தொழில் வாய்ப்பு இல்லாமல் விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். அவர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கும்படி வேண்டுகோள் விடுக்கின்றேன். உங்கள் முதலீடுகள் எமது பிரதேசங்களில் தொழில் வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை மட்டுமன்றி எமது பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப் படுவதற்கும் வழிவகுக்கும்.

3. இன அழிப்பில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டிக் கட்டமைப்பு ஒன்றே பாதுகாப்பான தீர்வாக அமையும். இதை பெற்றுக் கொடுக்கும் பாரிய கடப்பாடு பாரத மக்களிடையே இருக்கின்றது. ஒற்றையாட்சிக்குள் ஏற்படுத்தப்படும் எந்தத் தீர்வும் தீர்வாகாது என்பதற்கு இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டமே சான்றாக அமைந்திருக்கின்றது.

இலங்கை ஆட்சியாளர்கள் அன்று இந்தியாவைத் தீர்வு என்ற மாயைக்குள் சிக்க வைத்து இந்தியாவையும் எமது இளைஞர்களையும் மோதவைத்து பல கசப்பான சம்பவங்களை ஏற்படுத்தியதுடன் பின்னர் மிகவும் தந்திரமாக 13வது திருத்தத்தில் உள்ள மிகமுக்கிய சரத்துக்களையும் நீக்கிவிட்டு இன்று அதனை முற்று முழுதாக குப்பைக்குள் எறிவதற்கு தயாராகி வருகின்றனர். இலங்கையில் எந்தளவுக்கு தமிழ் மக்கள் ஒடுக்கப் படுகின்றார்களோ, எந்தளவுக்கு அவர்களின் பூர்வீக வடக்கு-கிழக்கு தாயகம் ஆக்கிரமிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை மறந்து விடாதீர்கள்.

அதாவது இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் தங்கியுள்ளது. இதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டின் சிங்களத் தலைவர்களிடையே இந்தியா மீது பற்றோ பரிவோ இல்லை என்பதை நீங்கள் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

4. அடுத்து எமது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு மூலோபாய கட்டமைப்பை ஏற்படுத்தி நீங்கள் செயற்பட வேண்டும். 5. தென் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் எமது பிரச்சினைகள் தொடர்பில் ஏனைய மாநிலங்களின் சட்ட மன்றங்களையும் ஒரு பொதுக் கொள்கையின் கீழே கொண்டு வந்து எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக மத்திய அரசினுடாக நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளிடமே வேண்டிக் கொள்கின்றேன்.

இலங்கையில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு உச்ச அதிகாரத்துடன் இருக்கின்றார்களோ அந்தளவுக்கு இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள். எமக்கு கிடைக்கக் கூடிய உச்ச அதிகாரங்கள் எந்த விதத்திலும் இந்தியாவின் மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக அமையாது. இந்தியாவில் ஜனநாயக கட்டமைப்புக்கான அடித்தளம் வலுவாக கட்டியெழுப்பப் பட்டுள்ளதுடன் நீதித் துறையின் சுயாதிபத்தியம் உச்சளவில் பேணப்படுகின்றது. வளமான, வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவே தமிழர்கள் உட்பட இந்தியாவின் தேசிய இனங்களின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் அவசியமானது என்பது தெளிவாக உணரப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான ஒரு இனம் இருக்கிறது என்றும் அந்த இனத்தின் விருப்பங்களுக்கு மாறாக ஏனைய இனங்களுக்கு எதனையும் வழங்கிவிட முடியாது என்பதுமான நிலை பாரதத்தில் இல்லை. ஆனால், பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துக்கு மாறாக தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கிவிட முடியாது என்று இலங்கையின் ஜனாதிபதியே கூறிவிட்டார். மகாவம்ச சிந்தனையின் கீழ் அரச நிறுவனங்கள் கட்டியெழுப்பப்பட்டு எமக்கு எதிரான இன அழிப்பு அங்கே நிறுவனமயப் படுத்தப்பட்டுள்ளது. நீதித் துறையின் சுயாதிபத்தியம் இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேலிய பாணியில் எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசின் ஊடாக நீங்கள் ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன். இங்கு இருக்கக் கூடிய அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒருங்கிணைந்து தமிழக அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

6. இறுதியாக, 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கில் எமது மக்கள் உயிர் துறந்து இனவழிப்புக்கான பரிகார நீதி எனும் போராட்ட வலுவை எமக்கு ஏற்படுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையில் இது தொடர்பாக இன அழிப்பு தீர்மானம் ஒன்றையுங் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கின்றோம். இதனை சர்வதேச அளவில் கொண்டு சென்று நீதியை வென்றெடுப்பதற்கு இங்குள்ள தமிழ் உறவுகள் அனைவரும் உதவ வேண்டும்.

எமது உலகத் தமிழ் வம்சாவளி உறவினர்கள் நீடுழி காலம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று வாழ்த்தி உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன் நன்றி.

வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் வடமாகாணம் செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் கூட்டணி இணைத் தலைவர் தமிழ் மக்கள் பேரவை.

(ஊடகப்பிரிவு)