வாய்மையை கடைப்பிடிக்க மாணவர்கள் திருக்குறள் படிக்க வேண்டும்..!

0

வேலூர் தமிழ்ச் சங்கமும் மற்றும் வேலூர் ஊரீசு கல்லூரியும் இணைந்து நடத்தும் திருவள்ளுவர் விழா வேலூர் ஊரீசு கல்லூரியில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ந் திகதி காலை 10 மணிக்கு வேலூர் ஊரீசு கல்லூரி காபு அரங்கத்தில் சிறப்பு விருந்தினர் விக்னேஸ்வரன் அவர்களின் உரை,

இவ் விழாவிற்கு தலைமை தாங்கும் விவேகானந்தா தகவல் தொழில்நுட்ப பல்கலைக் கழக நிறுவுனர் மற்றும் வேந்தரும் மேலும் இக்கல்லூரியின் பழைய மாணவருமான கல்விக்கோ வேந்தர் விஸ்வநாதன் அவர்களே, ஊரீசுக் கல்லூரி முதல்வர் அவர்களே, ஆசிரியர்களே, வேலூர் பேராயர் அவர்களே, மற்றைய சிறப்பு விருந்தினர்களே, எனதருமை மாணவச் செல்வங்களே!

வேலூர் தமிழ்ச் சங்கம் மற்றும் வேலூர் ஊரீசு கல்லூரி இணைந்து வழங்கும் தமிழர் திருநாள் விழா மற்றும் திருவள்ளுவர் விழாவில் இணைந்து கொள்ளுமாறு என்னை அழைத்த சகல நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் முதற்கண் உரித்தாகுக!

மாணவச் செல்வங்களான உங்கள் மத்தியில் பேசும் ஒரு வாய்ப்புக் கிடைத்தமையை இட்டு நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசியலுக்குள் காலடி வைத்த நாட்தொடக்கம் இவ்வாறான சந்தர்ப்பங்கள் குறைந்தே எனக்குக் கிடைத்து வந்துள்ளன. பத்து வருடங்களுக்கு மேல் என் சட்டத் தொழிலிலுடன் சேர்த்து வருகை தரும் விரிவுரையாளராக நான் கொழும்பில் பணியாற்றினேன். சட்டத்தைத் தமிழில் கற்பிக்க எமது நாடு முற்பட்ட போது 1971ம் ஆண்டில் முதன்முறையாக சட்டத்தை தமிழில் கற்பிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.

அக் காலகட்டத்தில் சட்டமானது தமிழ்நாட்டில் கூட தமிழில் கற்பிக்கப்படவில்லை. சட்டம், அரசியல் ஆகிய இரண்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் எனக்கு மீண்டும் ஒருமுறை மாணவச் செல்வங்களுடன் சேர்ந்திருந்து அளவளாவுவது பெரு மகிழ்வைத் தருகின்றது.

திருக்குறள் தமிழர்களின் அடையாள நூல். சர்வதேச புத்திஜீவிகள், அறிஞர்கள், ஆன்மீக வாதிகள், சரித்திராசிரியர்கள் போன்றோரிடையே திருக்குறளைப் பற்றி அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், அதனை மொழி பெயர்ப்பாக வாசித்தவர்கள் அல்லது மூலத்தைத் தமிழில் வாசித்தவர்கள் யாவரும் குறிப்பிடுவது பொதுவாக மூன்று விடயங்களை – ஒன்று – தமிழின் தொன்மை பற்றி, இரண்டு – அக்காலத் தமிழர்களின் சமுதாய நீதிநெறி முதிர்ச்சி பற்றி, மூன்று – திருக்குறளின் இலக்கியச் சிறப்பு பற்றி. எங்கள் மாணவ காலத்தில் அதாவது 1950களில் திருக்குறளை மனப்பாடஞ் செய்வது பயனற்றது என்றும் அவற்றின் அர்த்தத்தை மட்டும் அறிந்து கொண்டால் அல்லது தெரிந்து கொண்டால் அது போதுமானது என்ற கருத்து நிலவியது. அதனால் திருக்குறள் பலவற்றை மனனஞ் செய்யுஞ் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.

ஆனால் 1953, 54 அளவில் மா.போ.சி. என்ற மா.போ.சிவஞான கிராமணியார் கொழும்பில் நான் கற்ற றௌயல் கல்லூரிக்கு வருகை தந்து திருக்குறள் பற்றிப் பேசியது இன்றும் நினைவில் இருக்கின்றது. அவர் குறிப்பிட்ட குறள் கூட நினைவில் இருக்கின்றது. அவர் அன்று அந்தக் குறளை ஒப்புவித்த விதம் கூட இன்றும் என் மனதில் ரீங்காரம் இட்ட வண்ணம் இருக்கின்றது. அந்தக் குறளை அவர் அன்று ஒலித்தது போலவே நானும் உங்களுக்கு ஒப்புவிக்க விரும்புகின்றேன்.

குறள் பின்வருமாறு “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று”. அதாவது பொய் சொல்லாத அந்த பண்பை உறுதியாகக் கடைப்பிடித்தால் வேறு அறங்கள் எதனையும் செய்யாதிருந்தாலும் தவறேதுமிருக்காது. அது நல்லதே என்பது ஒரு பொருள். வேறு வியாக்கியானங்களும் தரப்படுகின்றன.

மா.போ.சி. அன்று கூறிய பல விதமான அர்த்தங்கள் இன்று என் மனதில் இல்லை. மறந்துபோய் விட்டன. ஆனால் அவர் ஒப்புவித்த விதம் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. கணீர் என்ற குரலில் அவர் “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் – அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்று அவர் ஒப்புவித்த குறள் என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாக ஆகிவிட்டது. அந்தக் குறளை மையமாக வைத்து சில கருத்துக்களை வெளிக்கொண்டு வரலாம் என்று எண்ணுகின்றேன்.

இந்தக் குறளுடன் தொடர்புபட்ட இன்னொரு குறள் வாய்மை அதிகாரத்தின் முதற் குறளாகும். அதில் “ வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலா சொலல்” என்று கூறுகின்றார் வள்ளுவர்.

ஆகவே பொய்யாமைக்கு இலக்கணம் ஏற்கனவே இந்த முதற் குறளிலேயே கூறி விடுகின்றார் வள்ளுவர். உண்மை அல்லது வாய்மை எனப்படுவது என்னவென்று கேட்டால் யார்க்கும் யாதொரு தீமையையும் தராத சொற்களைப் பேசுதலாம். அடுத்த குறளில் மேலும் ஒரு விடயத்தைக் கூறுகின்றார்.

“பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்று பொய்யாமை பற்றிய விரிவான கருத்தை அங்கு கூறுகின்றார் பொய்யாமொழிப் புலவர். அதாவது யாருக்கும் தீங்குதராத நன்மையைக் கொடுக்கும் சொற்கள் என்றால் பொய்யான சொற்கள் கூட உண்மையின் இடத்தில் வைத்து எண்ணத்தக்கனவாம் என்கின்றார்.

எனவே இந்த இரண்டு குறள்களையும் பரிசீலித்துப் பார்த்தீர்களானால் பொய்யாமை என்னவென்று விளங்கும்.

ஒன்று- யார்க்கும் யாதொரு தீமையைத் தராத சொல்லே பொய்யாமை. இரண்டு பொய்யான சொற்கள் கூட குற்றமற்ற நன்மையைக் கொடுக்கும் என்றால் அந்தப் பொய்யான சொற்களும் கூட வாய்மையே என்கின்றார் வள்ளுவர் “புரை தீர்ந்த” என்ற சொற்தொடர் முக்கியம்.

புரை என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் “குற்றம்” என்பது ஒரு பொருளாகும். புரை தீர்ந்த நன்மை என்று கூறும்போது குற்றமற்ற நன்மை என்றாகி விடுகிறது. குற்றமற்ற நன்மை தரும் சொல்லே வாய்மை என்று பொதுவாகக் கூறுகின்றார் பொய்யா மொழியார்.

என் சட்ட மாணவர்கள் கேட்பார்கள் “அது எப்படி சேர், பொய்யைக் கூறிவிட்டு அதுவும் வாய்மை என்று கூறுவது?” என்று. இந்தக் குற்றமற்ற என்ற சொற்தொடரைப் பாவித்து நான் தப்பித்துக் கொள்வேன். “வள்ளுவன் பொய் பேசச் சொல்லவில்லை. நீ கூறும் சொல் புரை தீர்ந்த நன்மை தரும் சொல்லா என்று ஆராய்ந்து பார்த்து சொல்ல வேண்டும் என்கின்றார்” என்பேன்.

புரை தீர்ந்த நன்மை என்பதற்குக் குற்றமற்ற நன்மை என்றும் பொருள் படலாம். குற்றமற்ற நன்மை என்றால் அந்தச் சொல்லைப் பாவிப்பதால் நன்மை கிடைக்க வேண்டும். ஆனால் பேசுபவர் குற்றம் செய்யக் கூடாது. குற்றம் செய்யாமல் நன்மை கிடைக்கச் செய்வது எப்படி? தனக்குக் குற்றம் செய்து பிறர்க்கு நன்மை செய்வதையே வள்ளுவன் குறிப்பிடுகின்றான் என்று தோன்றுகின்றது.

சில மாணவர்கள் இன்னொரு மாணவரைத் தாக்கத் துரத்திக் கொண்டு வருகின்றார்கள். ஓடி வந்த மாணவர் நீங்கள் நிற்கும் அறையினுள் நுழைந்து ஒளிந்து கொள்கின்றார். வந்தவர்கள் உங்களிடம் ஓடி வந்தவரைக் கண்டீர்களா அல்லது எங்கு சென்றார் என்று கேட்கின்றார்கள். எனக்குத் தெரியாது என்கின்றீர்கள் அல்லது வேறொரு திசையைக் காட்டி அவர்களை அத் திக்கால் ஓடச் செய்கின்றீர்கள். உங்கள் குற்றம் இன்னொருவருக்கு நன்மையாகின்றது. அந்தக் குற்றம் ஒரு குற்றமற்ற குற்றம் என்கின்றான் வள்ளுவன்.

தெரியாது என்று கூறியதும் பொய். நீங்கள் காட்டிய திக்கும் பொய். ஆனால் இன்னொருவருக்கு அடி கிடைக்காமல் செய்துள்ளீர்கள். ஆகவே உங்கள் பொய் மெய்யாகக் கணிக்கப்படுகின்றது. நீங்கள் பொய் கூறினீர்கள் என்று ஓடி வந்தவர்கள் தற்செயலாக அறிந்து கொண்டால் உங்களை நையப் புடைப்பார்கள். ஆனால்; உங்கள் பொய் உங்களை அவதிக்கு உள்ளாக்கி இன்னொருவருக்கு நன்மையைச் செய்திருந்தால் அந்தப் பொய் இன்னொருவருக்குத் தீமை நடக்காது காத்ததால் அதைப் பொய்யாக ஏற்க முடியாது என்கின்றார் வள்ளுவர்.

புரைதீர்ந்த என்று கூறும் போது உங்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் நன்மை தருவனவாக உங்கள் பொய் அமைந்திருந்தால் அது புரையுடையது என்றாகிவிடும். அது குற்றமுடையது என்று பொருள்படும். இன்னொருவருக்கு நன்மை தரும் பொய்யே வாய்மை. தனக்கு நன்மை தருவதாக இருந்தால் அல்லது அது சுற்றி வளைத்து உங்களுக்கு நன்மை தருவதாக இருந்தாலும் கூட அது பொய்மையே.

எங்களுடைய “பொய்யாமை” குறளிலே “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்கின்றார்.

“அறம் பிற” என்று வள்ளுவர் கூறியிருப்பதால் இந்த அறம் என்றால் என்ன என்று அடுத்து பார்ப்போம். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற – என்று கூறுகின்றார் வள்ளுவர். மனத்திலே குற்றம் இல்லாதிருத்தல் தான் முழு அறமாகும். மனத்தில் களங்கமுடன் நல்லனபோல் செய்யூம் பிறசெயல்கள் வெற்று ஆரவாரத் தன்மையுடையனவே என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.

ஓடி வந்தவரை தன் மனமறிய “வரவில்லை” அல்லது “தெரியாது” அல்லது “வேறு திக்கில் ஓடிவிட்டார்” என்று கூறுவது பொய்மை அல்லவா என்று கேட்டால் “இல்லை” என்கிறார் பொய்யாமொழியார். ஏன் என்றால் தன் மனதில் களங்கம் இல்லாமல் இன்னொருவரைக் காப்பாற்றத் தன்னையே தியாகம் செய்ய முன்வந்ததால் அவரின் பொய் பொய்யன்று, பொய்யாமையே என்று கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை.

ஆகவே இதுவரை கூறியவற்றைத் தொகுத்துக் கூறுவதாகில்

1. மனத்துக் கண் மாசில்லாமல் இருந்தால் அதுவே அறம்.
2. அந்த மாசற்ற மனதில் உதிப்பவற்றை சொல்லாலும் செயலாலும் நடைமுறைப்படுத்தும் போது அங்கு வாய்மை தோன்றுகின்றது. சிந்தனை, சொல், செயல் ஆகியன ஒரு நேர்க்கோட்டில் இருந்தால் அது வாய்மை. அவ்வாறான வாய்மையைக் கடைப்பிடித்தால் வேறு அறங்கள் எதுவும் தேவையில்லை. அந்த அறமே நன்மை தரும்.
3. இந்த வாய்மைக்கு ஒரு புறவுரை உண்டு. அது தான் “புரை தீர்ந்த” நன்மையைக் கொடுக்கும் பொய்மை. பொய்மை பிறர்க்கு நன்மை பயர்ப்பதாயின் அது பொய்யன்று. அது வாய்மையின் ஒரு பகுதியே.
4. பொய்மை தனக்கு நன்மை தருவதானால் அது பொய்மையே. அது குற்றமே. அதற்கு கர்ம வினை வந்து சேரும்.
5. பொய்மை பிறர்க்கு நன்மை செய்வதனால் அது வாய்மையே. அதற்கு நற்பலனே வந்து சேரும்.

ஆகவே மனம், வாக்கு, காயம் என்பவை நேர்க்கோட்டில் பிரயாணம் செய்ய வேண்டும். அதுவே வாய்மை. அந்த வாய்மையைக் கடைப்பிடித்தால் வேறு அறங்கள் தேவையில்லை. ஏன் என்றால் ஏற்கனவே உங்கள் வாழ்க்கை முரண்பாடுடையதாக மாறாது நேர்கோட்டில் பிரயாணம் செய்கின்றது. எப்போதும் மனம்இ வாக்குஇ காயங்களுக்கிடையில் முரண்பாடு தோன்றாதிருந்தால் மன அலைவு இருக்காது.

அதாவது Tension இருக்காது. நேர்க்கோட்டில் பயணஞ் செய்கின்றோம் என்ற ஒரு வித தன்னம்பிக்கை உங்களிடத்தில் குடி கொண்டிருக்கும். பிறர்க்கு நன்மை செய்ய ஒரு பொய்மையை நீங்கள் உங்கள் நேர்கோட்டில் உட கொண்டாலும் கூட அது உங்கள் நேர் வழியைப் பாதிக்காது. அதனால் அது வாய்மையே என்கிறார் வள்ளுவர்.

ஆனால் வாழ்க்கை முரண்பாடுகளுக்கு இடையில் வாழ வேண்டியதொன்று என்பதே யதார்த்தம். உங்கள் வாய்மை மற்றும் உங்கள் நேர்க்கோட்டு நடத்தை இன்னொருவருக்குத் தீங்கு விளைவித்தால் என்ன செய்வது? நேர்க்கோட்டில் முரண்பாடா மற்றவரின் தீங்கைத் தடுப்பதா என்று வரும் போது மற்றவரின் தீங்கைத் தடுப்பதே அந்த நேர்க்கோட்டு நடத்தையிலும் பார்க்க நன்மை தருவது என்று கண்டு அதனைத் தேர்ந்தெடுக்கச் சொல்லுகின்றார் எமது வள்ளுவப் பெருந்தகை.

காத தூரம் கடல் கடந்து வந்து மீண்டும் ஒருமுறை நீதியியலில் இந்தக் கல்லூரி அரங்கத்தில் திருக்குறள் ஊடாகப் பயணம் செய்ய எனக்கு வாய்ப்பளித்த அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர் வடமாகாணம்
செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் கூட்டணி
இணைத்தலைவர் தமிழ் மக்கள் பேரவை