தமிழரசுக் கட்சியின் வங்குரோத்து அரசியல்; ரதன் கட்சியிலிருந்து நீக்கம்..!

0

பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான ஆசிரியர் அக்கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள செட்டிக்குளம் மகா வித்தியாலய ஆசிரியரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.எம்.ரதனை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமது கட்சியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளை தலைவரும், முன்னாள் மாகாண அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியை சேர்ந்த குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக வெளியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக எமது கட்சியின் உறுப்பினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று கூடிய தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை ஆராய்ந்திருந்தது. இந்நிலையில் அவர் மீது கட்சியின் தலைமை விசாரணை ஒன்றை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் வவுனியா மாவட்ட கிளை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன் விசாரணை நடவடிக்கைகள் இடம் பெற்று முடியும் வரை அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டமைக்கமைய அவர் கட்சியின் உறுப்புரிமை மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் அங்கு கல்வி பயிலும் 17 வயது மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக செட்டிக்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிசாரால் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தன் மீதான போலி ஊழல் குற்றச்சாட்டின் போது இரவோடு இரவாக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட வைத்திய கலாநிதி, பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறாத நிலையில் குறித்த நபரை இடைநிறுத்திய இத்தகய அவசர முடிவானது கட்சியின் வங்குரோத்து அரசியலைக் காட்டுகிறது என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.